போராட்டத்தில் தேச விரோத சக்திகள்? கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் சொன்ன முக்கிய பதில்
டெல்லி: நீட் முறைகேடு விவகாரத்தில் நாடு முழுவதும் மாணவர் போராட்டத்தை முன்னெடுத்தது கரப்பான் பூச்சி கட்சி. இதனால் வேறு வழியில்லாமல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்து கரப்பான் பூச்சி கட்சி அரசியலில் குதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அதன் தலைவர்கள் அளித்த பதில் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
நீட் விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகவே கரப்பான் பூச்சி கட்சி தான் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. மத்திய அரசு மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டதை தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து போராட்டத்தையும் முடித்து கொள்வதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது.

கரப்பான் பூச்சி கட்சி
இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி அரசியலுக்கு வருமா என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இது தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். முதலில் பேசிய அசுதோஷ் ரங்கா, "இப்போது என் மனதில் இருப்பது எல்லாம் வீட்டுக்கு சென்று நன்றாக தூங்க வேண்டும் என்பதுதான்.
கடந்த இரண்டு மாதங்களாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இந்த போராட்டத்திலேயே இருந்தோம். முதலில் ஓய்வெடுக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில் என்ன நடந்தது என்பதை அமைதியாக யோசிக்க வேண்டும். இது எங்களுக்கு பெருமையான தருணம். மகிழ்ச்சியான தருணம். அதற்குப் பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்" என்றார்.
அரசியல்
அரசியலுக்கு வர மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லையே என்ற கேள்விக்கு அவர், "இந்தியாவில் எதற்கும் 'நோ' சொல்லக் கூடாது என்பதுதான் என் எண்ணம்" என்று பதிலளித்தார். இது தான் அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது கரப்பான் பூச்சி கட்சி எப்போது வேண்டும் என்றாலும் நேரடி அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதையே இது காட்டுகிறது.
வேறு திட்டம்
அதேநேரம் மற்றொரு செய்தி தொடர்பாளரான சௌரவ் தாஸ், வேறு விதமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் இது தொடர்பாக கூறுகையில், "இந்தியாவில் ஏற்கனவே 750 முதல் 800 அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் இளைஞர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எந்தவொரு கட்சியாலும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. எங்களின் தற்போதைய இலக்கு அரசியல் அல்ல. இந்த மாணவர் இயக்கத்தை அடிமட்டம் வரை கொண்டு செல்வதுதான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அழுத்தம் கொடுக்கும் மக்கள் இயக்கமாகவே செயல்பட விரும்புகிறோம்" என்றார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பேசிய அசுதோஷ் ரங்கா, "நேற்றைய தினம் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. ஆனால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதே ராஜினாமா செய்தி வந்துவிட்டது. அதன் பேச்சுவார்த்தை எஞ்சியிருந்த இரண்டு விஷயங்களை பற்றி தான் இருந்தது. அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட விதத்தை நாங்கள் பாராட்டுகிறோம். பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்தது" என்றார்.
மாணவர்கள் மீதான வழக்கு
மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து பேசிய அவர், "அமைதியான முறையில் போராடிய மாணவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதல் நாளிலிருந்தே அமைதியான போராட்டத்தையே நாங்கள் வலியுறுத்தினோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்றும் எதிர்காலத்திலும் அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும் அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது
30 நாட்கள் மாணவர்கள் தெருக்களில் போராடிய பிறகு தான் ஏன் அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது என்பது அரசிடமே கேட்க வேண்டிய கேள்வி. நாங்கள் எல்லாம் படித்து வேலையில் இருக்கும் சாதாரண இளைஞர்கள். அரசியல்வாதிகள் அல்ல. இந்த போராட்டம் அரசியலுக்காக அல்ல; மாணவர்களின் எதிர்காலத்திற்காக நடந்தது" என்றும் அவர் கூறினார்.
தேச விரோதிகள்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தில், "தேச விரோத சக்திகள் இந்த போராட்டத்தை பயன்படுத்த முயன்றன" என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரங்கா, "எங்களை தேச விரோதிகள் அல்லது வைரஸ் என்று அழைப்பதை அரசு இனிமேல் நிறுத்தும் என்று நம்புகிறேன். இறுதியில் மாணவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்பது தான் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
