முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட நிதி குறைப்பு.. மத்திய பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா?
டெல்லி: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சில முக்கிய துறைகளுக்கு இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வி துறைக்கு நிதி ரூ. 6,701 கோடி குறைக்கப்பட்டுள்ளது. சமூக நலன் துறைக்கு ரூ. 9,999 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் மதிப்பு ரூ.49.60 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பு ரூ.53.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2025-26 நிதியாண்டில் 56.1% ஆகவும், அது 2026-27 இல் 55.6% ஆக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் (2025-26) ஒதுக்கீடான ரூ.6.81 லட்சம் கோடியை விட 15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த ஒதுக்கீட்டில், ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக மட்டும் ரூ.2.19 லட்சம் கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முந்தைய ஆண்டின் ரூ.11.2 லட்சம் கோடியை விட தோராயமாக 9% அதிகரித்து ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ரூ.2.55 லட்சம் கோடியைப் பெற்றது, இதில் வருவாய் செலவினமாக ரூ.2.28 லட்சம் கோடியும், மூலதனச் செலவினமாக ரூ.0.27 லட்சம் கோடியும் அடங்கும்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற முதன்மைத் திட்டங்களை ஆதரிப்பதற்காக, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகத்திற்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ரூ.1.07 லட்சம் கோடியைப் பெற்றது. குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஆதரவாக ஜல சக்தி அமைச்சகம் ரூ.94,80 கோடி நிதியைப் பெற்றது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சில முக்கிய துறைகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வி துறைக்கு நிதி ரூ. 6,701 கோடி குறைக்கப்பட்டுள்ளது. சமூக நலன் துறைக்கு ரூ. 9,999 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயம், விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட ரூ. 6,985 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு கடந்த பட்ஜெட்டை ஒப்பிடும் பொழுது இந்த முறை ரூ. 3,686 கோடி குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications