மத்திய பிரதேசத்தில் ரேசில் முந்தும் காங்கிரஸ்? கலக்கத்தில் பாஜக.. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு
டெல்லி: மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் முதலில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 128 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.
காங்கிரஸ் கட்சி 98 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் சுயேட்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல், ஆளும் பாஜகவும் ஆட்சியை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனால், மத்திய பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சியின் கையே சற்று ஓங்கியிருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
மத்திய பிரதேசத்தில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு விவரம்:
மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ்: 113 - 125
பாஜக: 104 - 116
பி.எஸ்.பி: 0 - 2
சுயேட்சை கட்சிகள்: 0 - 3.












Click it and Unblock the Notifications