சனாதனத்தை டெங்கு என்றார்.. திமுக உதயநிதிக்கு மறைமுக அட்டாக்.. லோக்சபாவில் மோடி பேசியதை கவனிச்சீங்களா
டெல்லி: லோக்சபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள் எனவும் மோடி விமர்சித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தமது பேச்சின் தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது சிலருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2 மணி நேரமாக பேசிய மோடி: தொடர்ச்சியான பொய்களை பரப்பியவர்களுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது என்றார். இப்படி மோடி பேச தொடங்கியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோடியின் உரை நீடித்தது. மாலை 4.10 மணிக்கு பேச தொடங்கிய மோடி மாலை 6. 10 மணியை தாண்டியும் பேசி வருகிறார்.
சனாதனம் பற்றி: அப்போது பேசிய மோடி, "இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த சதி நடக்கிறது. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம்தான். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்.
இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாசாரமா? வழிபாடு செய்யும் கடவுளின் உருவம் அரசியல் ஆதாயத்திற்காக லோக்சபாவில் பயன்படுத்தப்பட்டது. இந்து தீவிரவாதிகள் என்ற வார்த்தையை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சிதான்.
ராணுவத்தை பலப்படுத்துகிறோம்: நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். போர்ச்சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறோம். பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கிக் கொண்டு நாட்டு படைகளை பலப்படுத்தி வருகிறோம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த ஊழல் காரணமாக நாட்டினுடைய படைகள் பலவீனம் அடைந்தது.
நாட்டின் படைகள் பலவீனமடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சியில் குண்டு துளைக்காத கவசங்கள் கூட படைகளுக்கு கிடைக்காமல் இருந்தது. அவர்களது ஆட்சியின் போது போர் விமானங்கள் கூட வாங்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. ஒரே நாடு ஒரே பென்சன் திட்டத்தை காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இவ்வாறு மோடி பேசினார்.
உதயநிதி பேசியது: முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்" இவ்வாறு உதயநிதிஸ்டாலின் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications