தலை, கை, கால்கள் இல்லை.. இது பிரதமர் மோடியா? பஹல்காம் தாக்குதல் பற்றி காங்கிரஸ் சர்ச்சை பதிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதேபோல் பாகிஸ்தானுக்கு இன்னும் தாக்குதல் முறையில் பதிலடி கொடுக்கவில்லை. அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு என்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தலை, கை, கால் இல்லாமல் போட்டோ ஒன்றை காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ள நிலையில் அது பிரதமர் மோடியை குறிக்கும் வகையில் உள்ளதாக பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பைசாரன் புல்வெளி என்பது ‛மினி ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இது பிரபல சுற்றுலா தலமாக உள்ளது. கடந்த 22ம் தேதி 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.
விரைவில் ராணுவம், கடற்படை, விமானப்படை உதவியுடன் பாகிஸ்தானை நம் நாடு தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கு முன்பாக பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவது, அட்டாரி - வாகா எல்லை மூடல், வர்த்தக உறவை துண்டித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை நம் நாடு எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் கூட காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சியினர் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் என்பது உளவுத்துறையின் தோல்வி தான். இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட 3 எக்ஸ் பதிவுகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. நேற்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛GAYAB'' என்ற சொல்லுடன் பதிவு செய்தது. அதில் தலை, கை, கால் இல்லாமல் வெறுமனே மேலாடை, பேண்ட் மற்றம் ஷூ மட்டும் இருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. கயாப் என்றால் மிஸ்ஸிங் என்று பொருள்படும்.
மேலும் இந்த பதிவில் காங்கிரஸ் போட்டு இருக்கும் போட்டோவின் உடை என்பது பிரதமர் மோடியை குறிக்கும் வகையில் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தலை, கை, கால் இன்றி பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்திவிட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவு என்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதன்பிறகு இரவு 7.05 மணிக்கு வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடியின் போட்டோ போடப்பட்டுள்ளது அதில், ‛‛ஃபேக்ட் பைல். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீரில் 2018 முதல் 2021 ம் ஆண்டு வரை 1,145 பயங்கரவாத செயல்கள் நடந்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு நேற்று இரவு 8.05 மணிக்கு பதிவிட்ட பதிவில் வீடியோ இடம்பெற்றுள்ளது. அதில், ‛‛பஹல்காம் தாக்குதலில் 28 உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் அலட்சியம் காரணமாக நடந்த இந்த தாக்குதலில் அரசு அமைதியாக இருக்கிறது. மேலும் சில கேள்விகள் உள்ளன. பயங்கரவாதிகளுக்கு எப்படி பயங்கர ஆயுதம் கிடைத்தது? பயங்கரவாதிகள் எப்படி எல்லை பகுதியில் இருந்து நம் நாட்டின் 200 கிலோமீட்டர் தெலைவுக்குள் நுழைந்தனர்? இந்த விஷயத்தில் எப்படி உளவுத்துறை பெரிய தோல்வியடைந்தது? ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் இடத்தில் எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை? ஏன் இன்னும் ஒருவர் கூட இப்போது வரை பொறுப்பேற்கவில்லை? இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது. அமைதியை அல்ல'' என அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்புடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பங்கேற்றது. அப்போது மத்திய அரசின் பதிலடி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில் தான் தற்போது எக்ஸ் பதிவில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications