திமுகவின் அதிரடி பிளான்.. காங்கிரசுக்கு போன கடைசி ஆஃபர்.. 36 தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள் கன்பார்ம்
டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி, இன்று டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலவி வந்த தொகுதிப் பங்கீட்டு இழுபறிக்கு இந்த சந்திப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் அதிரடித் திட்டம்: 36 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள்
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிக இடங்களை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது:
சட்டமன்றத் தொகுதிகள்: காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 36 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா இடங்கள்: தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்க, கூடுதலாக 2 ராஜ்யசபா இடங்களை காங்கிரசுக்கு வழங்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டணி உறுதி
சமீபகாலமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் மத்தியில் "ஆட்சியில் பங்கு" வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. மேலும், ஒரு சில தலைவர்கள் புதிய கூட்டணிகள் குறித்துப் பேசி வந்த நிலையில், கனிமொழி - ராகுல் காந்தி சந்திப்பு அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையை நிலைநாட்டவும், பாஜகவின் சவாலைத் தமிழகத்தில் எதிர்கொள்ளவும் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளன.
இந்தத் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கும்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒருபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை வழங்குவதாக 'மெகா ஆஃபர்' கொடுத்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில், காங்கிரஸைத் தக்கவைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, நடிகர் விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸ் தலைமைக்கு ஒரு பிரம்மாண்டமான தூது அனுப்பப்பட்டுள்ளது. அதில், "எங்களுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் ஆட்சியில் பங்கு அளிப்பதோடு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும்" என்று உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த அதிரடி ஆஃபர் தான் ராகுல் காந்தியை ஒரு தீர்க்கமான முடிவெடுக்க விடாமல் யோசிக்க வைத்துள்ளது.
திமுகவின் 'இறுதி' வியூகம்
இதற்கு இடையே தான் காங்கிரஸைத் தக்கவைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்திற்கு திமுக தரப்பில் மிகத்தெளிவான செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "காங்கிரஸிற்கு 30 முதல் 36 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும், அதிகபட்சம் போனால் 38 தொகுதிகள் வரை தரத் தயார். ஆனால், அமைச்சரவையில் பங்கு (Cabinet Share) என்பதற்குப் பேச்சிற்கே இடமில்லை" என்று திமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் நீண்டகாலக் கோரிக்கையை நிராகரித்துள்ள ஸ்டாலின், அதே சமயம் அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக சில "மாற்று அதிகாரப் பகிர்வு" திட்டங்களை ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.
ஸ்டாலின் வழங்கிய புதிய 'பவர்' ஆஃபர்கள்
அமைச்சரவையில் இடமளிக்க முடியாது என்றாலும், அரசு நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் காங்கிரஸிற்கு முக்கியத்துவம் அளிக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். அந்தத் தூதுச் செய்தியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
துணைச் சபாநாயகர் பதவி: தமிழக சட்டமன்றத்தின் கௌரவமிக்க துணைச் சபாநாயகர் (Deputy Speaker) பதவி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும்.
அரசு வாரியத் தலைவர்கள்: செல்வாக்குமிக்க 5 அரசு வாரியத் தலைவர்கள் (Board Chairman) பதவிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படும்.
அரசு நியமனப் பதவிகள்: பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நலவாரியத் தலைவர்கள் பதவிகளில் காங்கிரஸிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள்: வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிக தொகுதிகளை வழங்க திமுக தயாராக உள்ளது என்று கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications