தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே நிலவும் முரண்பாடுகள் தான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்றி மேலிட தலைவர்கள் டெல்லியில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திமுகவிடம் மல்லுக்கட்டியது. அதோடு 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி கேட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு பணியவில்லை. கூட்டணி ஆட்சி ஒத்துவராது எனக்கூறிய அவர் கடந்த முறையை விட 3 தொகுதிகளை மட்டுமே கூடுதலாக வழங்கினார்.

இதன்மூலம் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸில் கருத்து வேறுபாடு
தற்போது வரை காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. இதற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடு தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தமிழக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தமிழக எம்பிக்கள், நிர்வாகிகளுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டென்ஷனில் தலைவர்கள்
தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதோடு வேட்பாளர் தேர்வு ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியல் இறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் டென்ஷனாகி உள்ளனர்.
மேலிட தலைவர்கள் ஆலோசனை
இந்நிலையில் தான் தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தான் வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், நிவேதிதா ஆல்வா, ஸ்கிரீனிங் கமிட்டி தலைவர் டிஎஸ் தியோ சந்திரசேகர் உள்பட மேலிட தலைவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக தலைவர்களுக்கு அனுமதியில்லை
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள், எம்பிக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக எம்பிக்கள், நிர்வாகிகள் பங்கேற்கும்போது வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்படுவதால் காங்கிரஸ் மேலிடம் அவர்களை தவிர்த்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு இன்று இரவு அல்லது நாளை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் இறுதி பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதோடு, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications