'ஓட்டு திருட்டு’ புகார்: நீக்கப்பட்ட வாக்குகளை மீட்க காங்கிரஸ் தொடங்கிய புதிய வெப்சைட்!
டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுளளனவா என்பதை சரிபார்க்கவும், மீண்டும் பெயரை சேர்க்க கோரவும் Iamvoterakshak.in என்கிற வெப்சைட்டை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஓட்டு திருட்டு குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், தற்போது வாக்காளர்கள் பெயர்களை செக் செய்ய புதிய வெப்சைட்டை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

SIR நடவடிக்கையின்போது தங்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? என்பதை வாக்காளர்கள் இந்த வெப்சைட் மூலம் தாங்களாகவே சரி பார்த்துக் கொள்ளலாம். தவறுதலாக பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால்.. அதற்கு எதிராக முறையான புகார்களை பதிவு செய்யவும், வாக்காளர் பட்டியலில் பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கவும், இந்த வெப்சைட் வழிவகை செய்கிறது என்று.. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.
SIR நடவடிக்கையின் போது, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி.. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு 'வாக்கை காப்போம்! நாட்டை காப்போம்!!' என்று பெயரிட்டு இருக்கிறது. இந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டமாக, காங்கிரஸ் தொண்டர்கள் 'வாக்குப் பாதுகாவலர்கள்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள.. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் நேரில் செல்வார்கள். அங்கு> வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை, அவர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார்கள் என்று கட்சி அறிவித்திருக்கிறது.
தேர்தல் நடைமுறையின் நேர்மை மீட்டெடுக்கப்படும் வரை, வாக்கு திருட்டுக்கு எதிரான இந்த பிரச்சாரம் தொடரும் என வேணுகோபால் கூறியிருக்கிறார். நவம்பர் 26ம் தேதி அன்று, நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரிய அளவிலான அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணிகள் நடத்தப்படும் என்று கட்சி அறிவித்திருக்கிறது. அதேபோல, கிராம அளவில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு.. SIR நடவடிக்கையின் போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து காட்டப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை மட்டுமே நாங்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறோம் என்று ஆணையம் கூறி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் பதில் இப்படி இருக்கும் நிலையில், தற்போது நீக்கப்பட்ட வாக்குகளை மீட்டெடுக்க கட்சி புதிய வெப்சைட்டை தொடங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
