யாருக்கும் பயப்படாதீங்க.. நேர்மையாக செயல்படுங்க.. அதிகாரிகளுக்கு காங்கிரசிடம் இருந்து பறந்த கடிதம்
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அரசு அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். யாருக்கும் சார்பாக நடக்காமல் அரசியல் அமைப்பு வகுத்த விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகின்றன. தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையுடன் உள்ளன. அதேவேளையில் வெற்றிக்காக பாஜக எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த சூழலில் தான், அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அந்த கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். அரசு அதிகாரிகளாகிய நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு விஷயத்திற்கும் தலைவணங்க வேண்டாம்.
வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் அஞ்சாதீர்கள். தகுதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை அதிகாரி வரை எந்த ஒரு அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் கடமைகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து அதிகாரிகளும் யாருக்கும் அஞ்சாமல் யாருக்கும் சாதகமாக செயல்படாமல் சேவை செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக, அனைத்து அமைப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இத்தகைய சூழலில் கார்கே எழுதிய கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications