உதயநிதி, ஆ.ராசா கருத்தில் உடன்பாடில்லை.. பட்டென சொன்ன காங்கிரஸ் தலைவர்: திரும்பிப் பார்க்கும் திமுக!
டெல்லி: சனாதன தர்மம் குறித்து திமுகவின் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் கடுமையாகப் பேசியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்துடன் தங்களுக்கு உடன்பாடில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்" எனக் கூறியிருந்தார்.'

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி பேச்சுக்கு எதிராக காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, திமுக எம்.பி ஆ. ராசா நேற்று பேசும்போது, "சனாதனத்தை டெங்கு மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். மலேரியா, டெங்கு நோய்களை சமூகம் அருவறுப்பாகப் பார்ப்பதில்லை. ஆகையால் எங்களைப் பொறுத்தவரையில் தொழுநோய், எச்.ஐ.வி போல் சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தைப் பார்க்க வேண்டும்" எனப் பேசினார்.
இந்த நிலையில் சனாதனத்தைத் தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி நோயுடன் ஒப்பிட்டுப் பேசியதாக ஆ.ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறி அமைச்சர் உதயநிதி மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆ. ராசா எம்.பி மீதும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன தர்மம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்தில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் முழு ஆதரவு அளித்து வருகின்றன. அதேசமயம், நாடு தழுவிய அளவில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் திமுகவின் 'சனாதனம்' பற்றிய கருத்துகளை ரசிக்கவில்லை.
இந்நிலையில் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பவன் கேரா உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்தில் உடன்பாடில்லை. சர்வ தர்ம கொள்கைகளில்தான் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் நம்பிக்கை கொண்டிருக்கலாம். அது அவர்களது தனிப்பட்ட விஷயம்.
ஒவ்வொரு மதத்தையும் சிந்தனையையும் ஒன்றாக இணைத்த வரலாறு எங்களிடம் உள்ளது. இந்த நாடு எண்ணற்ற வண்ணங்களால் ஆனது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இங்கு அனைவருக்கும் ஒரு இடம் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டமோ அல்லது எங்கள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமோ எந்தவொரு நம்பிக்கையும் எதைவிடவும் கீழானதல்ல என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. " என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் காங்கிர்ஸ் கட்சிக்குள் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, சனாதன தர்மம் பற்றிய உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு முன்னதாகவே ஒப்புதல் அளித்திருந்தார். சம உரிமைகள் இல்லாத எந்த மதமும் உங்களை மனிதனாக நடத்தாத ஒரு நோயைப் போன்றது என்று பிரியங்க் கார்கே கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, "தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். அவர்களிடம் எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், அனைத்து மதங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கவனம் பெற்றுள்ளது. அவர் ஒரு ஜூனியர். எதன் அடிப்படையில் உதயநிதி தனது கருத்தை சனாதனம் குறித்து தெரிவித்தார் என்பது எனக்கு தெரியாது. என்னை பொருத்தளவில் எல்லோரும் அனைத்து மதங்களையும் மதிப்புடன் சமமாக நடத்த வேண்டும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications