சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நடக்க போகும் அதிரடி!
காங்கிரஸ் கட்சியில் நாளை நடக்க உள்ள காரிய கமிட்டி கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
டெல்லி: டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இடைக்கால தலைவர் சோனியா பதவியில் தொடருவாரா? இல்லையா? என்பதும் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிய வரும்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வருடமாகவே விவாதம் செய்யப்பட்டு வந்தது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் அதன் தலைமைக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. என்ன நடந்தாலும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க மாட்டேன் என்று ராகுல் அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருக்கிறார். ஆனால் இவரும் கூட வேண்டா வெறுப்பாகவே இடைக்கால தலைவராக இருப்பதாக கூறுகிறார்கள்.

சீனியர்கள் அப்செட்
இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்குள் சீனியர்கள் பலர் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். தற்போது இருக்கும் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலிமையான முடிவுகளை எடுப்பதில்லை. ஒரு பேட்டி கூட அவர் கொடுப்பது இல்லை. கட்சியில் ஏதாவது பெரிய பிரச்சனை என்றால் அவர் முடிவு எடுப்பது இல்லை, அனைத்திற்கும் தயக்கம் காட்டுகிறார். சோனியா அவ்வளவு ஆக்டிவாக இப்போது இல்லை என்று காங்கிரஸ் சீனியர்கள் கூறுகிறார்கள்.

என்ன தேவை
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடியான தலைவர் ஒருவர்தான் தேவை என்று சீனியர்கள் கூறுவதாக தெரிகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா இல்லாமல் வேறு ஒருவர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். மொத்தமாக காரிய கமிட்டியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியிலும் புதிய தலைவர்களை, செயலாளர்களை களமிறக்க வேண்டும், என்று சீனியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காந்தி குடும்பம்
அதிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று மொத்தமாக நேரு குடும்பத்திற்கு எதிராக சீனியர்கள் கொதித்து போய் உள்ளதாக கூறுகிறார்கள். ராகுலும், சோனியாவும் கடந்த ஒன்றரை வருடமாக எதுவும் செய்யவில்லை. மாநிலங்களில் தேர்தலில் வென்றும் கூட ஆட்சியை இழந்து வருகிறோம். ஆனால் இதற்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை. இதனால் தலைமைக்கு பொறுப்பான தலைவர் ஒருவரை கொண்டு வர வேண்டும் என்று சீனியர்கள் கூறி வருகிறார்கள் .

ஒரே காரணம்
நாளை காங்கிரஸ் கட்சி சார்பாக காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் முழுக்க முழுக்க சோனியா vs சீனியர்கள் என்பதை மட்டுமே மையமாக வைத்து நடக்கும் என்கிறார்கள். சோனியா ஒன்று பதவி விலகி புதிய தலைவருக்கு வழி வகுக்க வேண்டும். அல்லது சோனியாவிற்கு ஆதரவாக முடிவு எடுக்க கூடிய அதிகாரம் கொண்ட இரண்டு துணை தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் கோரிக்கை என்கிறார்கள்.

முக்கிய முடிவு
சோனியாவிற்கு எதிரான கூட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. அதிலும் சோனியாவிற்கு எதிராக 23 மூத்த தலைவர்கள் களமிறங்கி உள்ளனர் என்ற தகவலும் கூட காங்கிரஸ் தலைமை இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் நாளையே இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். நாளையே காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications