நாடாளுமன்றத்தில் வார்த்தைக் கட்டுப்பாடு.. புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி.. ராகுல் கிண்டல்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறித்த மக்களவை செயலகத்தின் அறிவிப்பு பற்றி ராகுல் காந்தியின் ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப் போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அதேசமயம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கூடுதலாக வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், முதலைக் கண்ணீர், அவமரியாதை, மாயை, பச்சோந்தி, கறுப்பு நாள் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.-க்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மக்களவையின் செயலகத்தின் அறிவிப்பு குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
அதில், புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்பார்லிமென்ட்டரி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அன்பார்லிமென்ட்டரி என்றால், நாட்டை பிரதமர் வழிநடத்தும் விதத்தை, விவாதத்தின் போது மிகச்சரியாக பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கியத்திற்கு உதாரணமாக, இரட்டை நிலைப்பாடு கொண்ட சர்வாதிகாரி ஒருவர் தனது பொய்களும், திறமையின்மையும் வெளிச்சத்துக்கு வரும்போது முதலைக் கண்ணீர் வடிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications