துணிச்சலான கேள்விகள்.. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகும் மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களவை உறுப்பினராக குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மகாராஷ்ட்ராவில் இருந்து ஆசாத் 1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.
சில காலம் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த ஆசாத், 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்
அவருக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத் மிகவும் நல்லவர். மிகச்சிறந்த நண்பர் என்று புகழ்ந்தார். அப்போது கண் கலங்கி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த ஆசாத், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தனது முன்மாதிரியாக கருதினார்.

வெங்கைய நாயுடுவுக்கு கடிதம்
இந்நிலையில், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மற்றொரு காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கார்கேவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரிசீலனையில் முதலிடம்
மல்லிகார்ஜுன கார்கே, 2014 முதல் 2019ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக செயல்பட்டவர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஹிந்தி பேசுபவர்
ஆசாத்தின் ஓய்வை கருத்தில் கொண்டு தான் கார்கே மாநிலங்களவைக்கு கொண்டு வரப்பட்டார் என்று பலரும் கருதுகின்றனர். மேலும் காங்கிரஸ் மக்களவை தலைவராக இருந்து பல்வேறு பிரச்சனைகளில் கேள்வி எழுப்பிய தலித் தலைவர் என்ற பெயரும் கார்கேவுக்கு உண்டு. குறிப்பாக, நன்றாக ஹிந்தி பேசுவார்.