தீவிரமடைந்தது நீட் போராட்டம்.. டெல்லி என்.டி.ஏ அலுவலகத்திற்குள் நுழைந்து மாணவர் அமைப்பினர் முழக்கம்!
டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.டி.ஏ அலுவலகத்துக்குள் நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது.
நீட் நுழைவுத் தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தோ்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி நாடு முழுவதும் 7 மையங்களில் நடைபெற்றது. இதில் 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், கட்சிகளின் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து, உட்புறமாக பூட்டிக்கொண்டு நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications