இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. கட்டுப்படுத்த அரசு தீவிரம்
டெல்லி: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இதனிடையே தங்கள் குர்கான் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பேடிஎம் அறிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் முதல் முறையாக வுகான் நகரத்திலிருந்து பரவியது. இந்த வைரஸ் நோய் வந்தால் சாதாரண சளி, காய்ச்சல், மூச்சுவிட சிரமம், கிட்னி பாதிப்பு வரை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். இதன் மூலம் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கொரோனா குடும்பத்தில் இது 7 ஆவது வைரஸ் என்றாலும் இதற்கு முன்னர் இப்படிப்பட்ட தீவிர வைரஸை பார்த்ததே இல்லை என கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கில்
இதுவரை 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த நோய்க்கு 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்த நிலையில் இந்த நோய் இந்தியாவுக்கும் பரவி வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறுகையில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

பூரண நலம்
மார்ச் 3 -ஆம் தேதி வரை இந்தியாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கொரோனா பரவியது. வுகானிலிருந்து வந்த 3 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர்களுக்கு கேரளாவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பூரணமாக குணமடைந்ததை அடுத்து அவர்கள் 3 பேரும் வீடு திரும்பினர்.

டெல்லி மருத்துவமனை
டெல்லியில் இருவருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதில் ஒருவர் டெல்லியை சேர்ந்த 45 வயது நபர். இவர் ஐரோப்பாவிலிருந்து டெல்லிக்கு பிப். 25 ஆம் தேதி வந்தார். இவர் இத்தாலி, ஹங்கேரி, வியன்னா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் டெல்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நொய்டாவில் பள்ளி மூடல்
துபாயிலிருந்து ஹைதராபாத் வந்த சாப்ட்வேர் என்ஜினியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர் இந்த வைரஸுடன் பேருந்தில் பயணம் செய்ததும் தெரியவந்தது. இவருடன் வந்த சக பயணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது போல் இத்தாலிக்கு சுற்றுலா சென்ற 69 வயது ஜெய்ப்பூர் முதியவருக்கு கொரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நொய்டாவில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்து நொய்டாவில் தனியார் பள்ளி மூடப்பட்டுள்ளது. ஆக்ராவில் மட்டும் 6 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தீவிர சோதனை
இந்தியாவில் கொரோனா பரவிவிட்டதால் பாராசிட்டாமல், நியோமைசின், அசிக்லோவிர் , டினிடாசோல், மெட்ரோனிடாசோல், விட்டமிணன் பி12, பி6, பி1, குளோராம்பெனிகால் உள்ளிட்ட மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பாதிப்பு குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா
இந்தியாவில் மார்ச் 4- ஆம் தேதி நிலவரப்படி 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷர்ஷவர்தன் கூறுகையில் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கான தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கொரோனா பரவுவதை மேலும் தடுக்கலாம்.

ஆக்ராவில் 6 பேருக்கு
ஏற்கெனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 16 பேர் இத்தாலிக்கு சுற்றுலா சென்று வந்தவர்களில் அடங்குவர். அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் படையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications