மீண்டும் மீண்டுமா.. இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா.. 5,364 பேர் பாதிப்பு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனோ தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்து 364 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றானது நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா நோய்த் தொற்று பரவல் சற்று குறைந்திருந்தது. 2019 முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு இந்த தொற்றானது நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 498 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று நாடு முழுவதும் தொற்று பாதிப்பின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படுள்ளது. 221 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஒமைக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7 என்ற வகையான உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருகிறது. இது வீரியம் இல்லாத கொரோனா தொற்று என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications