“பெற்றோர்களின் மொழியில் பேசுவதால்.. குற்றவாளிகளின் பற்கரை மறைந்துவிடாது!” மோடி மீது சிபிஎம் சாடல்!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தியிருந்த மாணவர்கள் தன்னை குறித்து விமர்சித்திருந்ததாகவும், எனவே அவர்களை மன்னித்து விட்டுவிடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்நிலையில், பெற்றோர்களின் மொழியில் பேசுவதால்.. குற்றவாளிகளின் பற்கரை மறைந்துவிடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் எம்பி சு.வெங்கடேசன், "தற்செயலாக நாக்கைக் கடித்துக்கொண்டதற்காகப் பற்களை உடைத்துக்கொள்வதில்லை என்று மாணவர்களுக்காக அனுதாபப்பட்டிருக்கிறார் பிரதமர். பெல்லட் குண்டுகளாலும் மின்சார லத்திகளாலும் மாணவர்களின் இரத்தத்தை ருசித்த அதிகாரத்தின் பற்கள் யாருடையது பிரதமரே? பெற்றோர்களின் மொழியில் பேசுவதால் குற்றவாளிகளின் பற்கரை மறைந்துவிடாது" என்று சாடியிருக்கிறார்.

பிரதமரின் வீடியோ
நேற்றிரவு சோஷியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டிருந்த மோடி, "டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் எனது தாயார் பற்றியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களை நான் மன்னிக்கிறேன்.
குழந்தைகளை மன்னிக்கிறேன்
தன்னை விமர்சிக்கும் இளைஞர்களை தண்டிப்பதோ, அல்லது அவர்களை நீதிமன்றத்திற்கு அலைக்கழிப்பதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்தில் தவறுகள் நடப்பது இயல்பு. சில குறும்புக்கார குழந்தைகள் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
சில சமயங்களில் நமது நாக்கு பற்களுக்கு இடையில் சிக்கி கடிவாங்குகிறது. இதற்காக நாம் பற்களை உடைப்பதில்லை. ஏனெனில் பல்லும் நாக்கும் நம்முடையதுதான். அதேபோல இளைஞர்களும் நம்முடையவர்கள்தான். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நம்முடைய பணி" என்று கூறியிருந்தார்.
கடும் எதிர்ப்பு
ஆனால், மோடியின் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. மாணவர்கள் மீது தடியடி நடத்திவிட்டு.. இப்போது வந்து வீடியோ போடுறீங்களா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். நீட் வினாத்தாள் லீக் ஆனது உண்மை. அதை எதிர்த்து மாணவர்கள் நியாயம் கேட்டு போராடியிருக்கிறார்கள். மாணவர்கள் கையில் எந்த ஆயுதங்கும் இல்லை... இருந்தும் கூட அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருக்கிறது. பெல்லட் குண்டுகளும், மின் அதிர்வு தடிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாணவர்களை இப்படித்தான் நடத்துவீர்களா? நியாயம் கேட்டதை தவிர மாணவர்கள் வேறு என்ன செய்தார்கள்? என்று பிரதமருக்கு பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
