வேக்சின் இருப்பிற்கு ஏற்ப திட்டமிடாதது யார் தவறு? பீதியை உண்டாக்குவதால் என்ன பயன்..மன்சுக் மாண்டவியா
டெல்லி: கொரோனா தடுப்பூசி எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்த பிறகும் அதற்கேற்ப திட்டமிடாதது யாருடைய தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வேக்சின் தட்டுப்பாடு குறித்து மாநில அரசுகள் மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது.
இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்குப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வேக்சின் பற்றாக்குறை
இருப்பினும், வேக்சினுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் பல இடங்களில் வேக்சின் போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும் வேக்சின் பணிகள் குறித்து விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநிலத்திற்குப் போதியளவில் வேக்சின் ஒதுக்கப்படுவதில்லை என்றும் சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி வேக்சின்களை மாநிலத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மன்சுக் மாண்டவியா ட்வீட்
இந்நிலையில் வேக்சின்கள் குறித்து பொய்யான தகவல்களை மாநில அரசுகள் அளித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தடுப்பூசிகள் விநியோகம் குறித்து, பல்வேறு மாநில அரசுகள் எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளன. அதன் மூலம் சில விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். வேக்சின் கையிருப்பு குறித்து தரவுகள் மூலமே உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசு
வேக்சின் பற்றாக்குறை உள்ளதாகக் கூறும் இந்த அறிக்கைகள் ஆதாரமற்றவை. இவை மக்கள் மத்தியில் பீதியையே ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஜூலை மாதம் எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்து ஜூன் 19ஆம் தேதியே மாநிலங்களுக்கு மத்திய அரசு தெரியப்படுத்திவிட்டது. அதன் பிறகு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் எவ்வளவு வேக்சின் கிடைக்கும் என்பது குறித்த தரவுகள் மாநிலங்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுகின்றன.

திட்டமிடல் இல்லை
தடுப்பூசி குறித்த தகவல்கள் மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் எப்போது, எந்த அளவில் தடுப்பூசி கிடைக்கும் என்பது மாநிலங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப வேக்சின் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இதைச் செய்துள்ளது. இந்த தகவல்களை வைத்து முறையாகத் திட்டமிட்டிருந்தால் பிரச்சினை வராது.

யார் காரணம்
ஜூன் மாநிலம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 11.46 கோடி தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பியது. இது ஜூலை மாதம்13.50 கோடி டோஸ்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னரும், நாம் வேக்சின் மையங்களில் அதிகப்படியான மக்களைக் காண்கிறோம். வேக்சின் பணிகளை முறையாகத் திட்டமிடாமல் செய்தற்கு யார் காரணம் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications