பாஜகவில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா.. மனைவி வெளியிட்ட போட்டோ! அடடே.. இங்க பாருங்க!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ரிவாபா ஜடேஜா குஜராத்தில் பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் ஜடேஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் கலக்கிய ஆல் ரவுண்டர். பந்துவீச்சில் ஃபுல் டைம் பவுலர்கள் பற்றாக்குறை ஏற்படும்போதும், பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து சொதப்பும்போதும், தனது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழ்நாட்டிலும் ஜடேஜாவுக்கு ரசிகர்கள் அதிகம். சென்னைக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். கடந்த ஆண்டு சென்னை அணிக்கும், குஜராத் அணிக்கும் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் வெற்றிக் கோட்டை நெருங்கி இருந்த சமயம், ஆட்டத்தையே திருப்பினார் ஜடேஜா.
குஜராத் அணி நிர்ணயித்த டார்கெட்டை நோக்கி ஆடிய சென்னை அணி கடைசியில் சற்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா 2 பந்துகளையும் பவுண்டரி, சிக்சர் விளாசி சென்னை அணிக்கு வெற்றிக் கோப்பையை பெற்றுத் தந்தார். அப்போது ஜடேஜாவை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிவாபா உடன் பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்றாலும், மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் பாஜகவில் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிகாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி. இந்த போட்டியோடு டி20 போட்டிகளில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஜடேஜா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பாஜக எம்.எல்.ஏ ரிவாபா, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை எனது வீட்டிலிருந்து தொடங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications