திருப்பரங்குன்றம் வழக்கு.. பட்டய உரிமை மன்னர் காலத்தில் இருந்தே இருக்கு! தர்கா நிர்வாகம் வைத்த வாதம்
டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கின் விசாரணையில் தர்கா நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை பார்க்கலாம். தர்காவுக்கான பட்டய உரிமைகள் மன்னர் காலத்தில் இருந்தே உள்ளது என்று கூறிய தர்மா நிர்வாகம், மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம், இப்போது வரை தர்காவுக்கான ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், கார்த்திகை தினத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இதனால் அப்போது தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தொடர்ந்து மேல்முறையீடு வழக்கிலும், தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றே தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் தீபம் ஏற்றக் கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில், ஆங்கிலேயர் காலத்தில் மலைப்பகுதி என்பதால், அந்த நிலத்தை அளவீடு செய்ய கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் இதே அளவைக் கல்லை பார்க்கலாம்.
அந்த வகையில் திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நிலத்தை அளவிடும் கல் தூண். அதேபோல் தீபம் விவகாரம் நீதிமன்ற வரம்பிற்குள் வராது என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தர்கா நிர்வாகம் தரப்பில், பல நூற்றாண்டுகளாக நெல்லித்தோப்பு எனப்படும் சிக்கந்தர் தர்மா மலைப்பகுதியில் தான் உள்ளது. இது முழுமையான மசூதி கிடையாது. இஸ்லாமிய குருமார்களுக்கானது தான்.
தர்காவுக்கான பட்டய உரிமைகள் மன்னர் காலத்தில் இருந்தே உள்ளது. மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம், இப்போது வரை தர்காவுக்கான ஆவணங்கள் உள்ளன. மதுரை உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி, தனது சொந்த பார்வையின் அடிப்படையில் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார் என்று வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தரப்பில், தீபத்தூண் பகுதி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமா, இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதன்பின் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கில் விரிவான வாதங்கள் வேண்டாம்.
இடைக்கால உத்தரவுக்கான வாதங்களை மட்டும் முன் வையுங்கள் என்று தெரிவித்தனர். இதனால் தூண் யாருக்கு சொந்தமானது என்பதை நோக்கி நீதிபதிகளின் பார்வை நகர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளையும் விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
