ஏழை முஸ்லிம்களை தண்டிக்கும் செயல்! டெல்லி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்.. விளாசிய ஓவைசி
டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் செயலுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஏழை முஸ்லிம்களை தண்டிக்கும் செயல் என கூறி பாஜகவை விமர்சித்த ஓவைசி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கையிலும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவானது. இது வன்முறையாக மாறியது.
இதனால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வன்முறையில் நடவடிக்கை
இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், ‛‛ குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வதந்திகள் பரப்பி அமைதியை சீர்குலைப்பதைத் தடுக்க சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என்றார்.

ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
இந்நிலையில் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் டெல்லி வடமேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‛‛பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, போலீஸ், சுகாதாரம், வடிகால் வாரியம் சார்பில் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 அல்லது ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பெண் போலீஸ் உள்பட 400 போலீஸ்காரர்களை பாதுகாப்புக்காக அனுப்ப வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

துவங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
இதையடுத்து இன்று ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற ஜேசிபி வாகனங்கள் வந்தன. அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி துவங்க உள்ளது. இந்நிலையில் தான் அசாதுதின் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜகவை விமர்சித்து இருப்பதோடு, ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை முஸ்லிம்களை தண்டிக்கும் செயல்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு எதிராக பாஜக போர் தொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தை போன்று டெல்லியில் வீடுகளை இடிக்க போகிறது. இதற்கான முன்கூட்டிய அறிவிப்பு இன்றி நீதிமன்றத்துக்கு செல்லவும் வாய்ப்பும் இன்றி உயிருடன் இருக்க துணிந்த ஏழை முஸ்லிம்களை வெறுமனே தண்டிக்கும் செயல் இதுவாகும். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலில் தனது பாத்திரத்தை தெளிவுப்படுத்த வேண்டும். அவரது அரசின் பொதுப்பணித்துறை தான் இந்த செயலில் ஈடுபடுகிறதா? இத்தகைய துரோகங்களுக்கும், கோழைத்தனத்துக்காகவா ஜாஹிங்கிர்புரி மக்கள் அவருக்கு வாக்களித்தனர்?. போலீஸ் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என அவர் சொல்வதற்கு இங்கு இடமில்லை'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications