அருந்ததி ராய் மீது.. 14 ஆண்டுகளுக்கு பிறகு பாயும் 'உபா' வழக்கு! டெல்லி ஆளுநர் ஒப்புதல்
டெல்லி: அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது 'உபா' சடத்தின் கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விமர்சனம்: பாஜக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததற்கு பின்னர் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் (UAPA) அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள் என்கிற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்த விமர்சனங்களை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோர் மீது 'உபா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

மோடி 3.O: கடந்த 2010ம் ஆண்டில் இவர்கள் பேசிய விவகாரத்திற்கு தற்போது நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அருந்ததி ராய் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி குறித்தும், பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்து வந்திருக்கிறார். தற்போது மோடி 3.O அரசு அமைந்துள்ள நிலையில் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
காரணம்: கடந்த 2010ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அருந்ததி ராய், "காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. இராணுவ பலத்தினைக்கொண்டு இந்தியா கைப்பற்றியது. காஷ்மீர் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று பேசியிருந்தார். அதேபோல முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் பேசியதும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் கொடுத்த புகார்தான் உபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாக சொல்லப்படுகிறது.
கண்டனம்: டெல்லி ஆளுநரின் ஒப்புதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து கூறுகையில்,
"சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-ல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருக்கிறது.
ஒருவேளை இது பாஜக அவருக்கு பதவி வழங்கியதற்கு காட்டும் கைமாறா என்பது தெரியவில்லை! அருந்ததி ராய்-ன் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்?
1. மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இசுலாமியர்களை 'ஊடுருவல்காரர்கள்' என்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்றும் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் நச்சுமிகுந்த கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
2. "நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போல சித்தரித்து காயப்படுத்தினார் பிரதமர் மோடி.
3. தமிழ்நாட்டு மக்களின் உணவு கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஒடிசா பாஜக வீடியோ வெளியிட்டது. இது போன்ற நிகழ்வுகளில் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 கோமாவிற்கு சென்றது ஏன்?
ஜனநாயகத்திற்கு எதிரான UAPA சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சட்டத்தின் கீழ் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மட்டும் 4871 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு உள்ளது. குறிப்பாக Manan Dar என்னும் புகைப்பட நிருபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் சித்திக் கப்பான் 2020 முதல் 2023 வரை சிறையில் இருந்தார்.
இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.
எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்" என்று x தளத்தில் பதவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications