35,000 போலீசார் குவிப்பு, 20 மெட்ரோ ஸ்டேஷன்கள் திடீரென மூடல்! டெல்லியில் என்ன நடக்கிறது? 500+ கைது!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்டோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், டெல்லி உச்சக்கட்ட அலர்ட்டில் உள்ளது.
பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 10 மாதங்களில் இது தொடர்பாக 14 முறை தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கரப்பான் பூச்சி கட்சி
அதேபோல கரப்பான் பூச்சி கட்சியும் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே பெங்களூர், மும்பையில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லியிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.. இதையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு டெல்லி போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், போராட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
500+ கைது
இதற்காக டெல்லி முழுவதும் 35,000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய ஆயுத காவல் படைகளின் 120க்கும் மேற்பட்ட குழுக்களும் முக்கிய சந்திப்புகள், போக்குவரத்து மையங்கள் மற்றும் பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த 500க்கும் மேற்பட்டோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பை கண்காணிப்பதற்காக புது டெல்லி மாவட்டம் 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இருந்தும் கூடுதல் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழலை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
உத்தரவு
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்பவர்களை, அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கைது செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் துணை ராணுவப் படையினர் ஆயுதங்களை எடுத்து செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டெல்லி போலீசார் லத்தி உள்ளிட்ட தடுப்பு உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. போலீசாரின் சீருடையில் உடல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பதிவுகளை மேற்கொள்ளும் இந்த கேமராக்கள், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான நிகழ்வுகளைப் பதிவு செய்ய உதவும்.
விரிவான நடவடிக்கை
மேலும், முக அடையாளம் காணும் அமைப்புகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் கட்டடங்களின் மொட்டை மாடிகளில் கண்காணிப்பு என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவது தொடர்பான சமூக வலைத்தள பதிவுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட கண்டெண்ட் கிரியேட்டர்களின் பக்கங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி பொது போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவையில் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 20 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ சேவையும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
