மோடி இல்லத்தில் பதற்றம்.. ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி கைது.. டெல்லி போலீசுடன் மோதல்
டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது டெல்லியில் நேற்று, போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபால் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இந்த தடியடியை கண்டித்து இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள், தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தர்மேந்திர பிரதான் மட்டுமின்றி தடியடிக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்று ராகுல் காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் ''இது போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை. உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்'' என்று கூறினார். ஆனால் ராகுல் காந்தி மறுத்துவிட்டார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதோடு, நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.
முதலில் காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த தலைவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தினர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், பவன் கேரா உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் நேரம் ஆக ஆக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு கூடினர். இதனால் அங்கு நிலைமை மோசமானது.
ஏற்கனவே அங்கு போராட்டம் நடத்த டெல்லி போலீசார் தடை விதித்து இருந்தனர். இந்த தடையை மீறி தான் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தியதால் டெல்லி போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர். ராகுல் காந்தி உள்பட அங்கு போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

பிரியங்கா காந்தி எம்பி பெண் என்பதால் அவரை பெண் போலீசார் அப்புறப்படுத்தினர். மாலை 6 மணிக்கு பெண்களை கைது செய்து தடுப்பு காவலில் வைக்க கூடாது என்பதால் அவரை போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்த வேளையில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. இதனால் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன்பு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
