பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுல் காந்தி சொன்ன வார்த்தை! உடனே ராகுல் இல்லத்திற்கு விரைந்த டெல்லி போலீஸ்
ராகுல் காந்தி சமீபத்தில் தான் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார்.
டெல்லி: பாரத் ஜோடோ யாத்திரையில், நாட்டில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டாப் டெல்லி போலீஸ் அதிகாரிகள் இப்போது ராகுல் காந்தியின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர்.
ராகுல் காந்தி இந்தியா முழுக்க தனது பாத யாத்திரை நடத்தியிருந்தார். அந்த பாத யாத்திரையை முடித்துக் கொண்டு பிரிட்டன் சென்ற ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்வினையாற்றினர். ராகுல் காந்தி இந்தியா திரும்பியுள்ள நிலையில், லண்டன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் இல்லத்தில் போலீசார்
இது ஒரு பக்கம் இருக்க ராகுல் காந்தி பாத யாத்திரை சமயத்தில் கூறிய சில கருத்துகள் தொடர்பாக டெல்லி போலீசாரும் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, நமது நாட்டில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் தகவல்களைக் கேட்டறிய டாப் டெல்லி போலீஸ் அதிகாரிகள் இப்போது ராகுல் காந்தியின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர்.

நோட்டீஸ்
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அவரை அணுகிய பெண்களின் விவரங்களைக் கேட்டு ஏற்கனவே கடந்த மார்ச் 16ஆம் தேதி டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ராகுல் காந்தியின் சமூக வலைத்தள பதிவின் அடிப்படையில் அவரிடம் சில கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். இருப்பினும், ராகுல் காந்தி இன்னும் இந்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

ராகுல் பேச்சு
காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி, "பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்" என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சை குறிப்பிடும் டெல்லி போலீசார், பாலியல் தொல்லைக்கு ஆளாவதாகச் சொன்ன பெண்களின் விவரங்களை ராகுல் காந்தியிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் இதன் மூலமே சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகவே இன்று டெல்லி போலீசார் ராகுல் காந்தியின் இருப்பிடத்திற்கு விரைந்துள்ளனர்.

போலீசார் தகவல்
இது குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சிறப்பு போலீஸ் கமிஷனர் நிலையில் இருக்கும் அதிகாரிகள் ஒருவர் ராகுல் காந்தியிடம் சம்பந்தப்பட்ட பெண்களின் தகவல்களைப் பெற முயல்வார். அதன் அடிப்படையில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றார். இருப்பினும், டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கையைக் காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு எந்த சட்ட முகாந்திரமும் இல்லை என்று காங்கிரஸ் உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் சாடல்
அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதைப் பார்ப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், "அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடும்படி அவரை வற்புறுத்த முடியாது. இது பழிவாங்கும் நடவடிக்கை தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றார். இதற்கிடையே ராகுல் காந்தி இதில் உரிய விவரங்களைத் தெரிவிக்கத் தவறினால், அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், "இது தனிநபர்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான விவகாரம் என்பதால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே அவரிடம் இருந்து தகவல்களைப் பெற முயல்கிறோம். மேலும், சாட்சிகள் சிதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications