ஒருத்தரையும் விடக்கூடாது! டெல்லியில் போலீஸ் களமிறக்கிய AI கண்காணிப்பு வேன்கள்! கொதிக்கும் மாணவர்கள்
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கும், காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பினருக்கும் எதிராக டெல்லி காவல்துறை தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், டெல்லி காவல்துறை அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் பயன்படுத்தி வருகிறது.

AI கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு
போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர், பார்லிமென்ட் ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள மத்திய டெல்லிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சிசிடிவி (CCTV) கேமரா நெட்வொர்க்கை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் ஏஐ கேமராவுடன் போலீசார் அங்கே சுற்றி வருகின்றனர். அருகிலேயே உள்ள வேன் மூலம் இவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டு உடனுக்குடன் ஆக்சன் எடுக்கப்படுகிறது. அதாவது நீங்கள் அங்கே போராடினால் போலீசார் ரகசிய கேமராவில் உங்களை பதிவு செய்து உங்கள் பின்னணியை நோண்டி எடுப்பார்கள்.
AI தொழில்நுட்பம் மூலம் போராட்டக் களத்தின் வீடியப் பதிவுகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகளை ஆராய்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் உருவங்கள் துல்லியமாகப் பிரிக்கப்படுகின்றன.
முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் (மூலம் சேகரிக்கப்படும் புகைப்படங்கள், காவல்துறையின் குற்றவியல் டேட்டா மற்றும் பிற அரசு ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன).
காவல்துறையின் நடவடிக்கை மற்றும் FIR-கள்
போராட்டத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல்கள், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் தடையை மீறி பேரணி நடத்தியது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்குகளை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.
AI கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படும் நபர்கள் மீது கலவரத்தை தூண்டுதல், தேச விரோத செயல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொதித்தெழும் மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்
அரசாங்கத்தின் இந்த தீவிர AI கண்காணிப்பு முறைக்கு மாணவர் அமைப்பினரும், சிவில் உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக வழியில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மாணவர்களை பயமுறுத்தவும், அவர்களின் எதிர்காலத்தை முடக்கவுமே காவல்துறை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போராட்டத்தில் அடையாளம் காணப்படும் மாணவர்களின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வியை முடக்கும் நோக்கிலேயே தரவுகள் சேகரிக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அடக்குமுறை
மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அடக்குமுறையைக் கையாள்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அங்கே ஏஐ களமிறக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
