ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்.. கெஜ்ரிவால் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருந்து வருபவர் பிபவ் குமார். கெஜ்ரிவால் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். ஸ்வாதி மாலிவாலிடம் கெஜ்ரிவால் தனி செயலாளர் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்செய் சிங் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்செய் சிங் கூறியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்க ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்ற போது, ஸ்வாதி மாலிவாலிடம் பிபவ் குமார் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்" என்றார். கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீதான குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
இந்த விவகாரத்தில், ஸ்வாதி மாலிவால் கடந்த 4 நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை போலீசாரிடம் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் டெல்லி போலீசார் பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மலிவால் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். கடந்த சில நாட்கள் எனக்கு மிக மோசமான நாட்களாக அமைந்தன. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.. பிற கட்சியின் தூண்டுதலின் பேரில் நான் இப்படி நடந்து கொள்கிறேன் என என்னை பேசியவர்களுக்கும் இறைவன் மகிழ்ச்சியை கொடுக்கட்டும். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பாஜகவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications