போராட்டக்கார்களுக்கு இனி உணவு கிடைக்காது? டெல்லி போலீசார் வைத்த ‘செக்'.. பகீர் கிளப்பும் CJP
டெல்லி: 'டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களையும், போராட்டக்காரர்களுக்கு வரும் உணவுகளையும் போலீசார் சோதனை சாவடி அமைத்து தடுப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சவால் விடுத்துள்ளது.
என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஜந்தர் மந்தருக்கு மக்கள், உணவு வருவதை உங்களால் தடுக்க முடியாது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதை உங்களால் தடுக்க முடியாது'' என்று சவால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சவால் விடுத்துள்ளது.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளன. இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அசுடோஸ் ரங்கா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கான உணவை போலீசார் தடுப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அசுடோஸ் ரங்கா தனது எக்ஸ் பக்கத்தில் டெல்லி போலீசாரை டேக் செய்து பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அந்த பதிவில் 2 வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்டுகளை அசுடோஸ் ரங்கா பகிர்ந்துள்ளார். அதில், ''போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து 5 முதல் 10 கிலோமீட்டர் சுற்றளவில் டெல்லி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர். அங்கு வரும் மாணவர்களை போலீசார் ஜந்தர் மந்தர் வராமல் தடுத்து விடுகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தருக்கு கொண்டு வரப்படும் உணவுகளை தடுத்து வருகின்றனர். உணவு டெலிவரியையும் தடுக்கின்றனர். இது ஜந்தர் மந்தரில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
டெல்லி போலீசார் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு சென்று ஜந்தர் மந்தருக்கு உணவு ஆர்டர் வாங்க கூடாது என்று மிரட்டல் விடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஜந்தர் மந்தரில் இருந்து கிளம்பும் மாணவர்கள், இளைஞர்களிடம் போலீசார் ஆதார் விவரங்களை பெறுகின்றனர். ஒருபக்கம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு மறுபுறம் அவர்கள் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக மாணவர்களின் விவரங்களை பெறுகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த பதிவில் அசுடோஸ் ரங்கா, ''நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். மக்கள் ஜந்தர் மந்தருக்கு வருவதை உங்களால் தடுக்க முடியாது. மக்கள் உணவு உண்பதை உங்களால் தடுக்க முடியாது. மக்கள் எங்களுக்கு உதவி செய்வதை தடுக்க முடியாது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதை உங்களால் தடுக்க முடியாது. அவர் சென்று விடுவார்'' என்று சவால் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
