Delhi Rain: டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழை.. முடங்கிய விமான சேவைகள்.. பயணிகளுக்கு பறந்த வார்னிங்
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 106க்கும் அதிகமான விமானங்கள் தாமதாகி உள்ள நிலையில் பயணிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதேபோல் டெல்லி அருகே உள்ள நொய்டா மற்றும் குர்கிராம் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இன்று காலையிலும் டெல்லியில் கடுமையாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தான் டெல்லி முழுவதும் இன்று ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் இன்று இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முழுவதும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு டெல்லியில் மழை நிற்காமல் பெய்யும் என கூறப்பட்டது. அதன்படி தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக கன்னாட் பிளேஸ், மதுரா சாலை மற்றும் பிரகதி மைதான் உள்ளிட்ட இடங்களில் மழைவெள்ளம் தேங்கியது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பிரகதி மைதான் பகுதியில் 100 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. லோகி ரோட்டில் 80. 7 மில்லி மீட்டர், சஃப்தார்ஜங்க் பகுதியில் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
யமுனை ஆற்றில் அபாய அளவை நோக்கி தண்ணீர் உயர்ந்து வருகிறது. யமுனை ஆற்றில் 205.33 மீட்டர் எனும் அபாய அளவை நோக்கி தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ரக் ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பலரும் ரக் ஷா பந்தன் நாளில் குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்த நிலையில் மழை பெய்து அவர்களின் பிளானை தள்ளிப்போட வைத்துள்ளது.
மேலும் இந்த கனமழையின் காரணமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்துக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் காலதாமதாக புறப்பட்டு செல்கின்றன. இன்று காலை முதல் 106 விமான பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் சார்பில் டெல்லி நிலவரம் குறித்தும், விமான சேவைகள் குறித்தும் அதன் எக்ஸ் பக்கங்களில் தொடர்ந்து அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. காலை 12 மணி நிலவரப்படி விமான சேவைகள் காலதாமதாக புறப்பட்டு செல்வதாக இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications