குண்டுவெடிப்பு நடந்து 5 நாட்களுக்கு பிறகு.. செங்கோட்டை நாளை முதல் திறப்பு! பார்வையாளர்களுக்கு அனுமதி
டெல்லி: டெல்லி செங்கோட்டை, பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தால் மூடப்பட்ட நிலையில், பார்வையாளர்களுக்காக நாளை (நவம்பர் 16 ஆம் தேதி) முதல் எப்போதும் போல் திறக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.

இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி என DNA பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் அதீல் என்பவரும் அடங்குவார். அவரது சகோதரரான டாக்டர் முசாபர் என்பவரே இந்த பயங்கரவாதக் குழுவின் முக்கிய சதிகாரராகக் கருதப்படுகிறார்.
டாக்டர் முசாபர், கார் குண்டுவெடிப்பைச் செய்த டாக்டர் உமர் முகமது மற்றும் டாக்டர் முசம்மில் ஆகிய மூவரும், கடந்த 2021 ஆம் ஆண்டு துருக்கியில் வைத்து இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலான கார் குண்டுவெடிப்பை அடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்,மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை வளாகம், மக்களின் பார்வைக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. எப்போதும் போல் பார்வையாளர்கள் வரலாம் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3வது நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு விட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications