வாக்காளர்கள் சட்ட விரோதமாக நீக்கம்.. ஆபத்தில் ஜனநாயகம்! எஸ்ஐஆருக்கு மேலும் ஒரு நீதிபதி எதிர்ப்பு
டெல்லி: குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதுதான் ஜனநாயகத்தின் இதயம் போன்றது. வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக வாக்காளர்க்ள் நீக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலி நரிமன், தேர்தல் ஆணையர நியமனம் நடைமுறையில் சிக்கல் உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் இந்த குறைகளை சரி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் தொடர்பான சர்ச்சை மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை இடை நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யபட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதியான ரோஹிண்டன் பாலி நரிமன் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது எனவும் ஜனநாயகத்தின் இதயம் அதுதான். வாக்காளர்களை சட்ட விரோதமாக பட்டியலில் இருந்து நீக்குவது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து என்று கூறியுள்ளார்.

22 லட்சம் பேர் மேல்முறையீடு
இது தொடர்பாக பாலிநரிமன் கூறியதாவது:- மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்.ஐஆர் பணிகளால் 90 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்தனர். இது அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையாக உள்ளது. 90 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்த போதும், இவ்விவகாரம் எஸ்.ஐ.ஆர் பணியை நிறுத்தி வைக்கும் அளவுக்கு உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.
வாக்குரிமையை இழந்தவர்களில் சுமார் 22 லட்சம் பேர் மட்டுமே மேல்முறையீடு செய்தனர். மற்றவர்கள் நீதியை அணுகுவதற்கான வசதி இல்லாதவர்களாக இருக்கலாம். இந்த 22 லட்சம் மேல்முறையீடுகளில் சுமார் 1 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 93 சதவீத வழக்குகளில் வாக்காளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு அரசு தான் விரும்பியதைப் பெறுவதற்காக குடிமக்களின் வாக்குரிமையை சட்டவிரோதமாக பறிக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
மிகவும் கவலை அளிக்கிறது
மேற்கு வங்கத்தில் இதன் விளைவாக அன்றைய ஆட்சி அகற்றப்பட்டு, மத்திய அரசுக்கு ஆதரவான ஆட்சி கொண்டுவரப்பட்டது. நமது நாட்டில் தற்போது நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. தற்போது வெளிவந்துள்ள மற்றொரு விஷயமும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இரு ஆணையர்கள் 14 முறை தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எப்படியோ அவர்கள் புதிய விதிகளின்படி அழுத்தம் கொடுக்காமல் போய்விட்டனர். செக்ஷன் 18 படி, பெரும்பான்மை தான் கணக்கிடப்படும். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையரான உங்களை விட எங்கள் இருவரின் முடிவே மேலோங்கும் என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களும் தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்களே" என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பு ஒழுங்கையே மறுக்கிறது
ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், 'இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2 ஆம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதாகும். அரசியலமைப்பின் அடிப்படையையே அது தாக்குகிறது. இந்திய அரசியலமைப்பின் கீழ் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அரசியலமைப்பு ஒழுங்கையே இது மறுப்பதாகும்' என்று தெலுங்கனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். தற்போது ஓய்வு பெற்ற நீதிபதியும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
