துருக்கிக்கு திடீர் சலுகை.. துரோகத்தை மறந்த மத்திய அரசு.. இண்டிகோ - ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்கு லக்
டெல்லி:‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம் நாட்டை தாக்க முயற்சித்தது. இதையடுத்து நம் மக்கள் துருக்கி உடனான வர்த்தகம் செய்வது, அங்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். மத்திய அரசும் துருக்கியை முடக்கும் வேலைகளில் ஈடுபட்டது. தற்போது மத்திய அரசு திடீரென்று யூடர்ன் போட்டுள்ளது. அதன்படி துருக்கி விமான நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் குத்தகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இது துருக்கியின் துரோகத்தை அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு லாபமடைய இந்தியா செயல்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு, ‛ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. மே மாதம் 7ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி
முன்னதாக பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நம்மை தாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. நம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியது. துருக்கி தனது ட்ரோன் ஆபரேட்டர்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து நம்மை தாக்க முயற்சித்தது.
இதனால் துருக்கி மீது மக்கம் கடும் கோபமடைந்தனர். துருக்கிக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை மக்கள் கைவிட்டனர். இதனால் துருக்கியின் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டது.
போயிங் விமான விவகாரம்
இதற்கிடையே தான் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் துருக்கி ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக 2 விமானங்களை இயக்கியது. இந்த விமானங்களுக்கான மே 31ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து குத்தகை காலத்தை 6 மாதங்கள் நீட்டிக்க இண்டிகோ அனுமதி கோரியது. ஆனால் விமான இயக்குநரகம் 3 மாதங்கள் மட்டுமே அனுமதி கொடுத்தது.
அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு எந்த காரணத்தை கொண்டும் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தது. இதன்மூலம் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான உறவை இண்டிகோ முறித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது துருக்கிக்கு செக் வைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
மத்திய அரசு திடீர் ‛யூ டர்ன்’
ஆனால் தற்போது மத்திய அரசு திடீரென்று யூடர்ன் போட்டுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 போயிங் 777 ரக விமானங்களை இண்டிகோ பயன்படுத்தவதற்கான குத்தகை காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீண்டும் இண்டிகோ சார்பில் குத்தகை காலத்தை நீட்டிக்க அனுமதி கோரியது.
துருக்கி நமக்கு செய்த துரோகத்தால் அனுமதி வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2 போயிங் 777 ரக விமானங்களை இண்டிகோ இன்னும் 6 மாதம் வரை பயன்படுத்த உள்ளது.
இன்னொரு 5 விமானங்களுக்கும் ஒப்புதல்
அதுமட்டுமின்றி துருக்கி நாட்டின் நிறுவனமான Corendon Airlines நிறுவனத்தின் 5 போயிங் 737 ரக விமானங்களை குத்தகை அடிப்படையில் இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த Corendon Airlines நிறுவனம் ஐரோப்பா நாடான மால்டாவை (Malta) தலைமையிடமாக கொண்டு தனி லைசென்ஸ் பெற்று இயங்கி வந்தாலும் கூட அது துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தேசநலன் தான் முக்கியம் - அதிகாரி
இதுபற்றி அதிகாரி ஒருவர், ‛‛ஏற்கனவே பாகிஸ்தானின் வான்வெளி பரப்புகள் நம் நாட்டின் பயன்பாட்டுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் துருக்கி விமான நிறுவனங்களின் விமானங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். இன்னொரு அதிகாரியோ, ‛‛துருக்கியில் இருந்து வரும் வணிகத்தை தடுக்கும் வகையில் இந்தியா எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை.
தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளூர் விமான நிறுவனங்களின் வணிக நலனை அடிப்படையாக கொண்டது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை விட தேசிய நலன் சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்தி உள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த செயல் துருக்கி மீதான சாப்ட் - கார்னரை காட்டும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications