மோடிக்கு போன மெசேஜ்.. தர்மேந்திர பிரதான் திடீர் ராஜினாமா ஏன்? வெளியான மிக முக்கிய தகவல்
டெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நாடு முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது ஏதோ திடீர் முடிவு அல்ல.. அது திட்டமிட்ட அரசியல் நகர்வாகவே இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு மீது இருந்த மிக பெரிய ஒரு பிரஷர் போய்விட்டது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
தலைநகர் டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தினர். இந்த முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்த சூழலில் தான் தர்மேந்திர பிரதான் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உதவியது.

மத்திய அரசு
ஆனால், இது ஏதோ எடுத்தும் கவிழ்தோம் என்றோ மாணவர் போராட்டத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காகவோ அவசர அவசரமாக எடுத்த முடிவு இல்லை. நிலைமை கையை மீறி போகக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நியாயமான கோபம் நீண்டகால அரசியல் மோதலாக மாறக் கூடாது என்பதிலும் மாணவர்கள் மீண்டும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு வட்டாரங்கள்
அவர்கள் மேலும், "தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் நடைமுறைகளில் சில குளறுபடிகள் இருந்தது உண்மை. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருப்பதையும் மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது அதன் ஒரு பகுதி தான். மாணவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் நியாயமானவை.. அதை நாம் கவனிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நிலைப்பாடு!" என்றார்.
ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான், கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக குறிப்பிட்டார். அவர் மேலும், "இது எனது தனிப்பட்ட கௌரவம் பற்றிய விஷயம் அல்ல. தேச விரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவொரு மாணவரின் எதிர்காலம் கூட சட்ட சிக்கலில் சிக்கக் கூடாது. மாணவர்கள் போராட்டங்களில் நேரத்தை செலவிடாமல், படிப்பிலும் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்துள்ளேன்" என்றார்.
நடவடிக்கை
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு முன்னதாகவே, தேர்வு முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. கேள்வித்தாள் லீக் சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்டம், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், தேசிய தேர்வு அமைப்பில் சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய அரசு வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "முதல் நாளிலிருந்தே மாணவர்கள் அரசியலின் பலிகடாக மாறக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருந்தது. போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையை ஏற்று கொள்வதன் மூலம் அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள்.. ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நீடித்து வந்த பதற்றமும் குறையும்" என்றார்.
தேச விரோத சக்திகள்
மாணவர்களின் உண்மையான அதிருப்தியை தேச விரோத சக்திகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசின் கவனம் முழுவதும் தேர்வு அமைப்பை மாற்றுவதில் தான் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய போட்டி தேர்வுகளை கம்யூட்டர் முறையில் நடத்துவது, தேசிய தேர்வு முகமைகளின் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவது, சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை அதிகாரத்தை அதிகரிப்பது, தேர்வு பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக மறுசீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கையை பெற அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
