கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.! கொஞ்சமாவது மனிதாபிமானம் உள்ளதா? திமுக எம்.பி.ஆதங்கம்!
டெல்லி: கைத்தறி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. புதுக்கோட்டை அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பான கோரிக்கைக்காக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றையும் அப்துல்லா எம்.பி. கொண்டு வந்துள்ளார்.
கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதன் மூலம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை மத்திய பாஜக அரசு அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

குளிர்காலக் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கைத்தறி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை அகற்றக்கோரி அனல் பறக்க பேசியிருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா. விவசாயத்தையும், கைத்தறியையும் நாட்டின் இரு கண்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கும் நிலையில் கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.விதித்திருப்பது சிறிதும் ஏற்புடையதல்ல எனக் கூறினார். விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளை அதிகளவில் கொடுக்கும் துறையாக கைத்தறித்துறை விளங்கி வருவதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

நெசவாளர்கள் பாவம்
இந்திய வரலாற்றில் கைத்தறி பொருட்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எந்த அராங்கமும் வரி விதிக்கவில்லை என்றும் மத்திய பாஜக அரசு தான் வரி விதித்ததோடு கைத்தறி நெசவாளர் நலத்திட்டங்களை புறக்கணித்து வருவதாக அப்துல்லா எம்.பி.குற்றஞ்சாட்டினார். கைத்தறி ஆடைகளை பயன்படுத்துமாறு தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியிருக்கும் நிலையில், கைத்தறி பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதித்து காந்தியை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக வேதனைத் தெரிவித்தார் அப்துல்லா எம்.பி.

சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்
இதைத் தொடர்ந்து கைத்தறி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய அப்துல்லா எம்.பி, இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தார். சுற்றுச்சூழலை காப்பதற்காக பல ஆயிரம் கோடி நிதி செலவழிக்கும் மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கப்படும் கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. போட்டிருப்பது விந்தையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நெசவாளர் சமுதாயம்
நெசவாளர் சமுதாயம் துயரத்தில் இருப்பதாக பேசிய எம்.எம்.அப்துல்லா எம்பி, கைத்தறி நெசவாளர்களின் துயரை போக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என பாடம் எடுத்தார்.












Click it and Unblock the Notifications