மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. நேரிலேயே சந்தித்து அளவளாவிய பாலு!
டெல்லி : காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திமுக சார்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அவர் தேர்வாகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பாதுகாக்க அனைவரும் போராடும் முக்கியமான காலத்தில் பொறுப்பேற்றுள்ளார் கார்கே எனக் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.

கார்கேவுக்கு தலைவர்கள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியும் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.

முக்கியமான தருணத்தில்
இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடிவரும் இந்த முக்கியமான தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நேரில் சந்தித்த டிஆர் பாலு
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திமுக சார்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில், மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துகளையும் அவர் கார்கேவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications