ரூபாய் நோட்டுகளில்.. சீரியல் நம்பர்களில் ஸ்டார்.. இப்படி இருந்தால் கள்ள நோட்டா? ரிசர்வ் வங்கி விளக்கம்
டெல்லி : ரூபாய் நோட்டு சீரியல் நம்பரில் ஸ்டார் குறியீடு இருந்தால் அதுவும் நல்ல நோட்டு தான் என்பது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களில் ஸ்டார் (*) குறியீடு இருந்தாலும் அது செல்லுபடியாகும் என்று கூறியுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா என்பது குறித்து புதுப்புது வதந்திகள் சமூக வலைதளங்களில் தினமும் பரவி வருகிறது. இப்படி பரவிய வதந்தியால் 10 ரூபாய் நாணயத்திற்கே பெரிய சிக்கல் ஏற்பட்டது. 10 ரூபாய் நாணயத்தை வாங்க பல இடங்களில் மறுத்தனர்.

அந்த கோடு இருந்தால் செல்லாது, இந்த குறியீடு இருந்தால் செல்லாது என்று பல்வேறு மொழிகளில் பலரும் பரப்பிய வதந்தியால் மக்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தனர். ஆனால் எல்லாம் ஒரு கட்டம் வரை தான்.. ரிசர்வ் வங்கி கடுமையான எச்சரிக்கை செய்த பிறகே மெல்ல மெல்ல 10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்க தொடங்கினர். ரிசர்வ் வங்கி உறுதி அளித்த பின்னர், மக்கள் கடைகளிலும், வங்கிகளிலும் இப்போது தாரளமாக 10 ரூபாய் நாணயங்களை சென்னை உள்பட பல இடங்களில் வாங்குகிறார்கள்.
10 ரூபாய் என்று இல்லை.. 100 ரூபாய் , 500 ரூபாய் , 200 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவில் வந்ததால அவை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பல ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பரில் ஸ்டார் குறியீடு இருந்தால் அதுவும் நல்ல நோட்டுதான் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நட்சத்திர (*) குறி கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போலவே செல்லுபடியாகும் என்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர் பகுதியில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் 100 நோட்டுகள் கொண்ட கட்டுகளாகவே வெளியிடப்படுகிறது. அவற்றில் வரிசையான எண்கள் கொண்ட நோட்டுகளாக இருக்கும். எனவே இப்படி அச்சிட்ட நோட்டுகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு மாறாக ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது. அப்படி அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் பகுதியில் நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்படும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் வரிசையாக எண்ணிடப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொன்றும் எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வரிசை எண்ணைக் கொண்டிருக்கும். ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற நோட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் சீரியல் நம்பரில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே ஸ்டார் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும்." என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் "ஸ்டார் சீரிஸ்" ரூபாய் நோட்டுகள் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்திய நாணயத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில் (பிரிவு B இன் கேள்வி 9) இதுபற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போய் பார்த்தால் ரூபாய் நோட்டுகளில் உள்ள நட்சத்திரம் (*) குறியீடு தொடர்பான தவறான தகவல்களை மக்கள் தெளிவு பெறலாம்.
புதிய ரூபாய் நோட்டுகள் வரிசையாக எண் வடிவில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய முன்னொட்டுடன் ஒரு தனித்துவமான வரிசை எண் இருக்கிறது. இந்நிலையில் பழுதடைந்த நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகளை அச்சடிக்க அந்த சிரீயஸ் முழுவதையும் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, பழுதடைந்த நோட்டுகளை மட்டும் மாற்றி , ஸ்டார் சிம்பலுடன் ரூபாய் நோட்டுகளுடன் ரிசர்வ் வங்கி மாற்றி வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அணுகுமுறை பொதுமக்களின் சிரமத்தை குறைத்தது மட்டுமல்லாமல், நாணய புழக்கத்தையும் சீராக்க உதவி வருகிறது.












Click it and Unblock the Notifications