3 நாட்களுக்கு வறண்ட வானிலை.. அப்புறம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
டெல்லி: தமிழகத்தில் தற்போது நீடிக்கும் வறண்ட வானிலை மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும், வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நடப்பு ஆண்டு வெப்பம் மிக அதிகமாக உள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிர வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை உயர்ந்து பதிவாகி இருக்கிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடும் பாடு பட்டு வருகின்றனர்.
நேற்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக கரூரில் 104.9 டிகிரி பதிவானது. அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியிருக்கிறது. வேலைக்காகவும், அவசிய தேவைகளுக்காகவும் வெளியே செல்லும் மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க இளநீர், தர்பூசனி, மற்றும் குளிர்பான கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது நீடிக்கும் இந்த வறண்ட வானிலை மேலும் மூன்று நாட்களுக்க்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும். 20 மற்றும் 21 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய தகவல் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications