டெல்லி அரசின் கோவாக்சின் ஆர்டரை.. மத்திய அரசு தலையிட்டு தடுக்கிறது.. பகீர் கிளப்பும் மணீஷ் சிசோடியா
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே டெல்லிக்கு 67 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க மறுத்ததுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்க மாநில அரசுகளே நேரடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இருப்பினும், நாட்டில் பல இடங்களிலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் 2ஆம் டோஸ் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆர்டர்
இந்நிலையில், மத்திய அரசு டெல்லிக்கு வர வேண்டிய கோவாக்சின் தடுப்பூசிகளைத் தடுப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பொதுமக்களுக்குத் தடுப்பூசியை வழங்க சீரம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்திடம் தலா 67 லட்சம் தடுப்பூசிகள் விகிதம் மொத்தம் 1.34 கோடி தடுப்பூசிகளை டெல்லி அரசு ஆர்டர் செய்திருந்தது.

மறுத்துவிட்டது
ஆனால், பாரத் பயோடெக் நிறுவனம் தங்களால் தடுப்பூசி வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டது. அதாவது 'சம்பந்தப்பட்ட' அரசு அதிகாரிகளின் உத்தரவுப்படி, தடுப்பூசிகளை விநியோகித்து வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் தான் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

மத்திய அரசு தலையீடு
அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகளை விநியோகிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் டெல்லி அரசின் ஆர்டருக்கு மத்திய அரசின் உத்தரவால் மறுக்கப்பட்டுள்ளது. எங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் காலியாகிக் கொண்டே செல்கிறது. மாநிலத்தில் தடுப்பூசி மையங்களில் கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி இறக்குமதி
இந்தியாவில் நிலைமையை இப்படியிருக்கும்போது 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது மிகப் பெரிய தவறு. முதலில் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும், பிறகு கூடுதல் நிறுவனங்களில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, அதை மாநில அரசுகளுக்கு விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை" என்றார்.

இந்திய தடுப்பூசி கொள்கை
இந்தியாவில் தடுப்பூசி கொள்கையில் அடிப்படையில், 45+ மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்குவது மட்டுமே மத்திய அரசின் பொறுப்பாகும். 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசியை வழங்குவது மாநில அரசின் பொறுப்பு. இருப்பினும், தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் சரி பாதியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டியுள்ளதால், மாிநல அரசுகளை தடுப்பூசிகளைப் பெற முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications