E80 vs E20: பெட்ரோல் விலை ரூ.20 கம்மி.. ஆனா மைலேஜ் 43% வீழ்ச்சி! E85 பெட்ரோல் உண்மை இதுதான்!
டெல்லி: சமீப காலமாக எத்தனால் எரிபொருள் பற்றிய விவாதங்கள் இந்தியாவில் உலகில் பரவலாக எழுந்துள்ளன. E20 முதல் E85 வரை பல்வேறு வகையான எத்தனால் கலப்பு தற்போது சந்தையில் இருக்கும் சூழலில், இது தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ளது. உண்மையில் E20, E85 எரிபொருட்களுக்கு இடையே வேறுபாடு என்ன.. இதனால் மைலேஜ் எந்தளவுக்குக் குறைகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த மே மாதத்தில் மத்திய அரசு E22, E25, E27 மற்றும் E30 போன்ற எத்தனால்-பெட்ரோல் கலவைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய மைல்கல்லாக, டெல்லியின் பூசா சாலையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விற்பனை நிலையத்தில் நாட்டின் முதல் E85 பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திறந்து வைத்தார்.

E85 எரிபொருள்
தற்போது இந்தியாவில் மிகக் குறைவான வாகனங்களே E85 எரிபொருளில் இயங்கும் தொழில்நுட்பத் திறன் கொண்டவையாக உள்ளன. கார்களில் மாருதி சுசூகி வேகன்ஆர் ஃபிளெக்ஸ் ஃபியூயல் மட்டுமே தற்போதைக்கு உள்ள ஒரே தேர்வாக இருக்கிறது. இருசக்கர வாகனப் பிரிவில், சுசூகி ஜிக்சர் எஸ்எஃப் 250 ஃபிளெக்ஸ் ஃபியூயல், ஹீரோ ஸ்பிளெண்டர்+ ஃபிளெக்ஸ் ஃபியூயல் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் ஃபிளெக்ஸ் ஃபியூயல் ஆகிய மூன்று மாடல்கள் மட்டுமே சந்தையில் கிடைக்கின்றன.
டெல்லியில் E85 எரிபொருளின் விலை லிட்டருக்கு 82.12 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கமான E20 கலவையின் விலை லிட்டருக்கு 102.12 ரூபாயாக உள்ளது. கணக்குப்படி பார்த்தால், E20 எரிபொருளை விட E85 லிட்டருக்கு 20 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது. இருப்பினும், இந்த மலிவான விலைக்குப் பின்னால் ஒரு முக்கிய சவால் மறைந்துள்ளது. அதாவது எத்தனால் எரிபொருளானது வழக்கமான பெட்ரோலை விடக் குறைந்த எனர்ஜி கொண்டுள்ளது. இதனால் இந்த எரிபொருளைப் பயன்படுத்தும்போது வாகனங்களின் எரிபொருள் நுகர்வு கணிசமாக அதிகரித்து, மைலேஜ் குறைகிறது.
வேறுபாடு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கு சுமார் 32 முதல் 34 மெகாஜூல் (MJ) எனர்ஜியை கொண்டிருக்கும் வேளையில், எத்தனால் வெறும் 21 முதல் 24 மெகாஜூல் எனர்ஜியை மட்டுமே கொண்டுள்ளது. இதன் காரணமா வாகனத்திற்கு அதிக அளவு எத்தனால் எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே, E85 போன்ற உயர் எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும்போது எரிபொருள் பயன்பாடு அதிகரித்து, மைலேஜ் குறையும்!
டெஸ்ட்
E85 எரிபொருளின் விலை குறைவாக இருந்தாலும், அது உண்மையிலேயே பணத்தைச் சேமிக்க உதவுகிறதா என்பதை அறிய ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக சுசூகி ஜிக்சர் எஸ்எஃப் 250 ஃபிளெக்ஸ் ஃபியூயல் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது. E85 எரிபொருள் பயன்படுத்தும் போது எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.டெஸ்ட் முடிவுகள் துல்லியமாக வர வேண்டும் என்பதற்காக ஒரே வாகனம் மட்டுமின்றி, ஒரே தூரம், ஒரே சூழல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலையில் ஒரே மாதிரியான ஓட்டுதல் சூழ்நிலையில் நடத்தப்பட்டன.
முடிவுகள்
மைலேஜ் சோதனையின் முடிவுகள் கவனிக்க வைப்பதாகவே உள்ளது.. ஜிக்சர் பைக் E20ல் 124.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தபோது 2.44 லிட்டர் எரிபொருளை மட்டுமே பயன்படுத்தியது. இதன் மூலம் லிட்டருக்கு 50.9 கிலோமீட்டர் மைலேஜ் கிடைத்தது. ஆனால் அதே பைக்கில் E85 எரிபொருளைப் பயன்படுத்தியபோது, 127.2 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு 4.37 லிட்டர் எரிபொருள் தேவைப்பட்டது. அதாவது மைலேஜ் லிட்டருக்கு வெறும் 29.06 கிலோமீட்டராக வீழ்ச்சியடைந்தது. இதன் மூலம் E20 உடன் ஒப்பிடும்போது E85 எரிபொருளைப் பயன்படுத்தும்போது மைலேஜில் சுமார் 42.9 சதவீத பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
E85 எரிபொருள் கணிசமான விலை குறைவாக இருந்தாலும், அதன் குறைந்த மைலேஜ் காரணமாக ஒட்டுமொத்தப் பயணச் செலவு அதிகமாகிறது. ஜிக்சர் பைக் E20 எரிபொருளில் இயங்கும்போது ஒரு கிலோமீட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், E85 எரிபொருளில் இயங்கும்போது இந்தச் செலவு 2.82 ரூபாயாக உயர்ந்தது. 1,000 கிலோமீட்டர் தூரம் கடப்பதற்கு E20 பயன்படுத்தினால் 2,004 ரூபாய் மட்டுமே தேவைப்படும் நிலையில், E85 எரிபொருளைப் பயன்படுத்தினால் 2,822 ரூபாய் செலவாகும். அதாவது கூடுதலாக 818 ரூபாய் வரை கூடுதலாகச் செலவிட நேரிடும்.
மைலேஜ் குறைவு
பயணச் செலவை மட்டுமே வைத்து பார்த்தால்.. தற்போதைய நிலையில் E20 எரிபொருளே மிகவும் சிக்கனமான மற்றும் சிறந்த தேர்வாக விளங்குகிறது. E85 எரிபொருள் பெரும்பாலானோருக்குப் பயனுள்ளதாக மாற வேண்டுமானால், அதன் தற்போதைய விலை இன்னும் குறைக்கப்பட வேண்டும். தற்போதைய விலையை வைத்துப் பார்த்தால் ரேட்டிற்கு ஏற்ற மைலேஜ் கிடைக்கவில்லை.
இது மட்டுமின்றி, வழக்கமான வாகனங்களை விட ஃபிளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களின் விலையும் அதிகம் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வழக்கமான E20 மாடலுடன் ஒப்பிடும்போது, சுசூகி ஜிக்சர் ஃபிளெக்ஸ் ஃபியூயல் பைக் சுமார் 8,000 ரூபாய் கூடுதல் விலையில் கிடைக்கிறது. மாருதி சுசூகி வேகன்ஆர் ஃபிளெக்ஸ் ஃபியூயல் காரின் கூடுதல் விலை சுமார் 86,000 ரூபாயாக உள்ளது. இந்த கூடுதல் முதலீட்டையும், கிட்டத்தட்ட 43 சதவீத மைலேஜ் குறைவையும் கடந்து மக்கள் E85 வாகனங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், E85 விலை மேலும் குறைக்கப்பட வேண்டும்!














Click it and Unblock the Notifications