டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக இன்று அறிவிக்கும் அமலாக்கத்துறை!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆதாயம் அடைந்துள்ளதாக அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட இருக்கிறது. 2 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சி, முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் முதல் முறையாக சேர்க்கப்பட இருக்கிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மணீஷ் சிசோடியா. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறது. இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.

இதனிடையே மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டின் சட்டவிரோதப் பணம் மூலமாக ஆம் ஆத்மி கட்சியும் ஆதாயம் அடைந்துள்ளது. ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோவா சட்டசபை தேர்தலுக்காக ரூ100 கோடியை லஞ்சமாக கேட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் அரசியல் கட்சி ஒன்று குற்றப்பத்திரிகையில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் 9-வது கூடுதல் குற்றப்பத்திரிகையில் இன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க இருக்கிறது அமலாக்கத்துறை. அப்படி ஆம் ஆத்மி கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அக்கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்; மேலும் தேர்தல் ஆணையத்துக்கும் இதுபற்றி அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கும்.
தற்போது பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டால் தேர்தல் ஆணையமானது அக்கட்சியை தடை செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி தடை செய்தால் பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்கிற அச்சம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications