முகத்த காட்டிட்டு தான் வருவேன்.. போன தடவ மாதிரி போட்டுறாதீங்க.. அமித்ஷாவை பார்க்கும் முன் எடப்பாடி கலகல
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை இன்று இரவு சந்தித்து பேசினார். அப்போது அமித்ஷாவை சந்திக்கும் முன்பு செய்தியாளர்களை பார்த்த அவர், நான் தெளிவாக முகத்தை காட்டிக்கொண்டு தான் வருவேன்.. போன தடவ மாதிரி போட்டு விட்டுவிடாதீர்கள்" என்று கலகலப்பாக பேசி சென்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது முகத்தை கர்சீப்பால் மூடியபடி வந்த புகைப்படம் இணையத்தில் வைராக பரவி விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் இன்று இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமித்ஷா உடனான இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்படும் என்றும், திமுக மீதான ஊழல் புகார் குறித்த பட்டியலை அமித் ஷாவிடம் எடப்பாடி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதுவரை எந்த பக்கம் செல்வோம் என சொல்லாமல் இருந்த அன்புமணி தரப்பு பாமக இன்று திடிரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அன்புமணி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடியின் இல்லத்தில் வந்து சந்தித்த அவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு அன்புமணி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதேபோன்று ஓபிஎஸ், டிடிவி தினகரனும் அடுத்தடுத்து இணைய உள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க தமிழகம் வந்த அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காத நிலையில் டெல்லிக்கு புறப்பட்டார்.
அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு
இன்று இரவு டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து முடிவு எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திமுக மீதான ஊழல் புகார் குறித்த பட்டியலை அமித் ஷாவிடம் எடப்பாடி வழங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தெளிவாக முகத்தை காட்டிக்கொண்டு தான்
முன்னதாக அமித்ஷாவை சந்திப்பதற்காக அவரது கார் உள்ளே சென்று கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் பார்த்த எடப்பாடி பழனிசாமி, "இன்னைக்கு நைட் அமித்ஷாவுடன் சந்திப்பு இருக்கிறது. நாளை இது பற்றி பேசுகிறேன்.. போன தடவ மாதிரி போட்டுவிடாதீர்கள்.. நான் தெளிவாக முகத்தை காட்டிக்கொண்டு தான் வருவேன்.." என சிரித்துக்கொண்டே கலகலப்பாக பேசினார்.
கடந்த முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க செல்லும் போது எடப்பாடி கர்சிப்பை கொண்டு முகத்தை மறைத்தபடியே காரில் வெளியே வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின. இதையடுத்து எடப்பாடியின் இந்த செயல் கடுமையான விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வியையும் எழுப்பியது.
எடப்பாடி பதில்
மேலும், இந்த விஷயத்தில் திமுகவினர், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடியை விமர்சிக்க தொடங்கினர். உடனே இதற்கு எடப்பாடியும் பதில் அளித்து இருந்தார். தற்செயலாக கைக்குட்டையை எடுத்து முகத்தில் வைத்ததை விமர்சனம் செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க பல கார்கள் மாறி மாறி சென்றார் என்றும், டெல்லிக்கு அடிமையாகிவிட்டார் எடப்பாடி என்றும் விமர்சித்து வந்த நிலையில் இன்று இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications