எடப்பாடி காட்டிய கிரீன் சிக்னல்.. என்டிஏ கூட்டணிக்குள் வரும் டிடிவி தினகரன்? டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு?
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணி தரப்பு பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அடுத்ததாக டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், டிடிவி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

அமித்ஷா தமிழகம் வந்த பிறகு..
தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்து பல மாதங்கள் ஆகியும், மற்ற கட்சிகள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வராமல் காலம் தாழ்த்தின. குறிப்பாக பாமக, தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை சொல்லாமல் இருந்தனர்.
விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதால் அங்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் நேற்று அன்புமணி தரப்பு பாமக அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது. அமித்ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில் இந்த கூட்டணி அமைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
சூட்டோடு சூடாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்து தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது, கூட்டணியை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கூட்டணியில் பல கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஓ பன்னீர் செல்வம், சசிகலாவை அதிமுகவில் கட்டாயம் இணைக்கப்பட மாட்டார்கள் என எடப்பாடி கட்டன் ரைட்டாக அமித்ஷாவிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக, அமமுக கட்சிகளை இணைப்பது குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.
என்.டி.ஏவுக்கு வரும் டிடிவி தினகரன்?
இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி இணைவார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்
மோடி தமிழகம் வருவதற்குள்..
முன்னதாக அமித்ஷா உடனான சந்திப்பின் போது வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 56 தொகுதிகளும், வெற்றி பெற்றால் 3 அமைச்சர்கள் பதவியும் வேண்டும் என எடப்பாடியிடம் அமித்ஷா கறாராக கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படும் என்றும், ஆட்சியில் அதிகாரம் என்பது புதுமையானது எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் திமுகவிடம் காங்கிரஸ் கட்சி பேசுவது போலவே, பாஜகவும் அதிமுகவிடம் தங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கறார் காட்டி வருகிறது. தொடர்ந்து ஜனவரி இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது என்.டி.ஏ கூட்டணி பிரமாண்ட கூட்டணியாக இருப்பதை காட்ட அமித்ஷா பிளான் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications