ஒரே ஆசிரியருடன் இயங்கும் 1 லட்சம் பள்ளிகள்.. ஆந்திரா முதலிடம்.. தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
டெல்லி: நாடு முழுவதும் 1,00,843 பள்ளிகளில் வெறும் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 16,357 பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்குவதாகவும், தமிழ்நாட்டில் 3,957 பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் செளத்ரி டேட்டாவுடன் பதில் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலமாக நாடு முழுவதும் ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான விகிதம் அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் படி மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையேயான விகிதம் தொடக்க பள்ளிகளுக்கு 19ம், மேல்நிலைப் பள்ளிக்கு 17ம், உயர்நிலை பள்ளிக்கு 23 என்ற அளவில் இருக்கிறது.
இதன் மூலமாக நாடு முழுவதும் ஆசிரியர் காலிப்பணி இடங்கள் நிரப்பவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2025-26ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, 1,00,843 பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. இந்தப் பட்டியலில் ஆந்திரா 16,357 பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
தேசிய அளவில் ஆந்திரா மட்டும் 16% பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 9,827 பள்ளிகளும், மகாராஷ்டிராவில் 9,269 பள்ளிகளும், உத்தரப் பிரதேசத்தில் 7.874 பள்ளிகளும், ராஜஸ்தானில் 7,200 பள்ளிகளும், கர்நாடகாவில் 8,042 பள்ளிகளும் ஒற்றை ஆசிரியருடன் இயங்கி வருகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் 6,769 பள்ளிகள் ஒற்றை ஆசிரியருடன் இயங்குகிறது.
அதேபோல் தெலங்கானாவில் 4,793 பள்ளிகளும், தமிழ்நாட்டில் 3,957 பள்ளிகளும், அசாமில் 3,159 பள்ளிகளும், ஹிமாச்சல பிரதேசத்தில் 3,128 பள்ளிகளும், உத்தரகண்டில் 2,655 பள்ளிகளும், சத்தீஸ்கரில் 2,461 பள்ளிகள் என 4 இலக்கங்களில் உள்ளனர். அதேபோல் கேரளாவில் 67 பள்ளிகளும், டெல்லியில் 7 பள்ளிகளும், நாகலாந்தில் 35 பள்ளிகளும், லடாக்கில் 28 பள்ளிகளும் ஒற்றை ஆசிரியருடன் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications
