மோடி புதிய அமைச்சரவையில் தேர்தல் மாநிலங்களில் இருந்து 30% அமைச்சர்கள்! ஆஹா நோட் பண்ணுங்க
டெல்லி: மோடி 3.0 இப்போது பதவியேற்று இருக்கும் நிலையில், இதில் அடுத்து விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முக்கிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இப்போது அனைவரது கவனமும் அடுத்து சட்டசபைத் தேர்தல்கள் நடக்கும் 6 மாநிலங்கள் மீது திரும்பியுள்ளன. அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கும் 6 மாநிலங்கள் மோடி 3.0 அமைச்சகத்தில் கவனிக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.

தேர்தல் மாநிலங்கள்: அதற்கு முன்பு அடுத்த சில மாதங்களில் எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். இந்தாண்டு இறுதிக்குள் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜாரகண்ட் மாநிலங்களின் சட்டசபை நிறைவடைவதால் அங்குத் தேர்தல் நடக்க உள்ளன. இதில் ஹரியானாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஷிண்டே- அஜித் பவார் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
அடுத்தாண்டு டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதில் டெல்லியில் ஆம் ஆத்மி அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் நிலையில், பீகாரில் பாஜக- ஜேடியு கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆறு மாநிலங்களில் தான் அடுத்த சில மாதங்களுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இருந்த அதிக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
ஏன் முக்கியம்: மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் என்பது இரண்டு வழிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முதலில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் போது தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் மத்தியில் இருக்கிறார் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்.. அடுத்துத் தேர்தல் காலங்களில் அமைச்சருக்கு இருக்கும் செல்வாக்கு சட்டசபைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும்.
இப்போது புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 72 பேரில் 21 பேர் தேர்தல் நடக்கும் இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும். இது மொத்த அமைச்சரவையில் 29.17%ஆகும். அதாவது அமைச்சரவையில் சுமார் 30% பேர் இந்த மாநிலங்களில் இருந்தே இடம்பிடித்துள்ளனர்.
மாநில வாரியாக தகவல்: ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலுமே கடந்த முறையைக் காட்டிலும் பாஜகவுக்குக் குறைவான இடங்களே கிடைத்திருந்தது. இருப்பினும், ஹரியானாவில் இருந்து 3 பேர், மகாராஷ்டிராவில் இருந்து 6 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் இருந்து முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குர்குராம் எம்பி ராவ் இந்தர்ஜித், கிரிஷன் பால் குர்ஜார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
மகாராஷ்டிரா: 48 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்பும் மகாராஷ்டிராவில் இருந்து 6 பேர் இடம் பெற்றுள்ளனர். பாஜகவில் இருந்து நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரக்ஷா காட்சே, முரளிதர் மொஹோல், ஷிண்டே சிவசேனாவில் இருந்து பிரதாப் ராவ் ஜாதவ், இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்து ராம் தாஸ் அத்வாலே இடம் பெற்றுள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காஷ்மீரை சேர்ந்த ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். மோடி அமைச்சரவையில் காஷ்மீரில் இருந்து ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். அதேபோல டெல்லியில் இருந்து கிழக்கு டெல்லி எம்பி ஹர்ஷ் மல்ஹோத்ரா அமைச்சராகப் பதவியேற்கிறார். இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.
ஜார்கண்ட்டை பொறுத்தவரை அம்மாநிலத்தில் இருந்து இரண்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். பாஜக எம்பிக்கள் அன்னபூர்ணா தேவி மற்றும் சஞ்சய் சேத் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள யாதவ் மற்றும் பனியா வாக்காளர்களைக் கவரவே இவர்களுக்குப் பதவி தரப்பட்டுள்ளது.
பீகார்: அடுத்து உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகாரில் இருந்தே அதிக அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர். பாஜகவில் இருந்து கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், சதீஷ் சந்திர துபே, ராஜ் பூஷண் சவுத்ரி.. ஜேடியு கட்சியில் இருந்து ராம் நாத் தாக்கூர், லாலன் சிங்.. லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து சிராக் பாஸ்வான்.. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் இருந்து ஜிதன் ராம் மஞ்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications