தேர்தல் ஆணைய சர்ச்சை: சிராக் பாஸ்வானைத் தொடர்ந்து பாஜக கூட்டணிக் கட்சிகளும் அதிரடியாக செக்!
டெல்லி: SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக விளக்கம் அளித்து, "மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்க வேண்டும்" என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் இன்று அதிரடியாகக் குரல் கொடுத்துள்ளன.
வாக்காளர் பட்டியல் நடைமுறை மற்றும் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நேற்று முன்தினம் கட்டுரை வெளியிட்டது. இந்த விவகாரத்தில், பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளதாகக் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுமே அழுத்தமான குரல்களை வெளிப்படுத்தியுள்ளன.
சிராக் பாஸ்வான் (மத்திய அமைச்சர் & லோக் ஜனசக்தி கட்சித் தலைவர்)
பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், "மத்திய அமைச்சர் என்ற முறையில் அரசின் ஓர் அங்கமாக நான் இருக்கிறேன். எனவே, ஓர் அரசியல்சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தை ஆதரித்துப் பேசும் நோக்கம் எனக்குக் கிடையாது. எனினும், அரசியல் ரீதியாகத் தங்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எப்போதும் எடுக்கும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கினால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ஆகவே, தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை இன்னும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பது என் கருத்து. ராகுல் காந்தியும் அவரது சகாக்களும் கூறும் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், தற்போது மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்" என்று கூறினார்.
லாவூ ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு (தெலுங்கு தேசம் கட்சி எம்பி)
தெலுங்கு தேசம் கட்சி MP லாவூ ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு கூறுகையில், "ஆந்திரப் பிரதேசத்தில் SIR நடவடிக்கைகள் வெளிப்படையாகவே நடைபெற்றன. அதேநேரம், தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட அரசியல்சாசன அமைப்பாகும். அதனால், யார் கேள்வி எழுப்பினாலும் அதற்குத் தகுந்த விளக்கமளித்து வெளிப்படைத்தன்மையைப் பேணினால் மட்டுமே அந்த அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெறும்" என்றார்.
உபேந்திர குஷ்வாஹா (ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் & மாநிலங்களவை எம்பி)
ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவரும் ராஜ்யசபா MP-யுமான உபேந்திர குஷ்வாஹா கூறுகையில், "இதுவரை நடந்துள்ள சம்பவங்களைப் பார்த்தால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் நிச்சயமாக ஏதோ ஒரு சிக்கல் இருப்பது தெரிகிறது. உண்மை எதுவாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். எழுப்பப்படும் கேள்விகளுக்கும், தெரிவிக்கப்படும் கவலைகளுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறுவது என்ன?
இதனிடையே, ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்:
"குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் எதிர்க்கட்சிகள் ஏன் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை? தங்களுக்குத் தோல்வி நிச்சயம் எனத் தெரிந்ததால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடப் பார்க்கிறது. SIR-ல் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதே, இவ்வளவு புகார்கள் கூறும் நீங்கள் ஏன் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' விசாரணைக் கட்டுரைக்குச் செப்டம்பர் 23 அன்று பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆணையர்களின் அந்த எதிர்ப்புக் குறிப்புகள் உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. எனினும், அவை அனைத்தும் "முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே" என்று அமைதியாகக் கடந்து சென்றுள்ளது. ஆனால், இரண்டு ஆணையர்கள் எழுப்பிய குறிப்பிட்ட கவலைகள் குறித்து எந்தப் பதிலையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்றும், அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் பி. பவன் வெளியிட்ட அறிவிப்பில், "எந்தவொரு அமைப்பிலும் விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகளும், மாற்று அவதானிப்பு வழிமுறைகளைப் பற்றிப் பேசுவதும் இயல்பான ஒன்றுதான். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னதாக நடைபெறும் கலந்தாய்வின் ஒரு பகுதியே இது. உறுப்பினர்கள் அளித்த எழுத்துப்பூர்வக் குறிப்புகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உட்கட்டமைப்புச் சோதனைகள் அனைத்துமே வழக்கமான நடைமுறைகள்தான். தேர்தல் நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்காகவே ஆணையர்களால் அந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
