எந்த கட்சிகளுக்கு யாரிடம் இருந்து நிதி? EC வெளியிட்ட முழு டேட்டா.. ஒரே ஆண்டில் 2,555 கோடி பெற்ற பாஜக
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எந்த கட்சிகளுக்கு நன்கொடை அளித்தன என்ற புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பாஜக ஒரே ஆண்டில் மட்டும் 2,555 கோடி ரூபாய் பாஜக பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்கள் அளிக்கப்பட்ட நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திர விவரங்களை சமர்பிக்க அவகாசம் கேட்ட ஸ்டேட் வங்கியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி சமர்பித்தது. இந்த விவரங்களை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்த நிறுவனங்களின் விவரம் இடம் பெற்று இருந்தது.
முழு பட்டியலும் வெளியாகியது: எனினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு கொடுத்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை. எந்தெந்த கட்சிக்கு யார் - யார் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கினார்கள் என்பதை வெளியுலகிற்கு கொண்டு வரும் வகையில் தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக வரிசை எண்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி, புதிய தரவுகளை எஸ்பிஐ அளித்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின் படி பாஜக 7 ஆயிரம் கோடி அளவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு 2018- மார்ச் மாதம் மட்டும் ரூ.210 கோடி பெற்றுள்ளது.

ஒரே ஆண்டில் 2555 கோடி பெற்ற பாஜக: 2018-19 ஆம் நிதி ஆண்டில் பாஜகவுக்கு ரூ.1,451 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. 2019-20ல் 2,555 கோடி ரூபாய் பாஜக பெற்றுள்ளது. 2021-21 நிதி ஆண்டில் பாஜகவுக்கு 22.38 கோடி கிடைத்துள்ளது. 2021-22- நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.1,033 கோடி பாஜக பெற்றுள்ளது. 2022-23 ஆம் நிதி ஆண்டில் ரூ.1,294 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் பாஜக ரூ.421 கோடியை பெற்றுள்ளது.
திமுக பெற்றது எவ்வளவு?: தேர்தல் பத்திரம் மூலம் திமுக கட்சி பெற்ற 656.5 கோடியில் ரூ.509 கோடியை லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் கொடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக காங்கிரஸ் கட்சி ரூ. 1,334.35 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அதிமுக பெற்ற 6 கோடி ரூபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மட்டும் ரூ.5 கோடி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications