எத்தனை கட்டமாக லோக்சபா தேர்தல்? புதிதாக பொறுப்பேற்ற ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் மீட்டிங்!
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களாக நேற்று நியமனம் செய்யப்பட்ட ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் இன்று பொறுப்பேற்றனர். லோக்சபா தேர்தல் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் நிலையில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 முக்கிய பொறுப்புகள் உள்ளன. ஒன்று தலைமை தேர்தல் ஆணையர். இன்னொன்று தேர்தல் ஆணையர் பொறுப்பு. இதில் தேர்தல் ஆணையர் பொறுப்பில் 2 பேர் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.

தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல் மற்றும் அனுப் சந்திர பாண்டே செயல்பட்டு வந்தனர். இதில் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு திடீரென்று கடந்த 9ம் தேதி அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 முக்கிய பொறுப்புகளில் 2 காலியிடங்கள் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரின் பெயர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று இரவில் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஞானேஷ் குமார் மற்றும் சுக்வீர் சிங் சந்து என்ற எஸ்எஸ் சந்து ஆகியோர் இன்று தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் 2 பேருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த மீட்டிங் காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மீட்டிங் என்பது நடந்துள்ளது. இந்த மீட்டிங் மதியம் 12 மணியளவில் முடிவுக்கு வந்தது. மீட்டிங் முடிந்த நிலையில் லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு என்பது நாளை மதியம் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்த வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த 2019 ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் தேதி என்பது மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் இந்த மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போதே இதுபற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications