குஜராத்தில் மோடி ராஜ்ஜியம்.. மொத்தமாக கிளீன் ஸ்வீப் செய்யும் பாஜக.. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்று தேர்தல் நடந்தால், குஜராத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் வேலைகளை தற்போதே கட்சிகள் தொடங்கியுள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே 2 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில், 3 வது முறையாக தற்போது நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற ஆயத்தமாகி வருகிறது.

இதேபோல் இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியைத் தனியாக உருவாக்கியுள்ளது. ஆனால் நிதிஷ் குமார், இந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துவிட்டார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
குஜராத்தில் 26க்கு 26: இந்த நிலையில், நடக்க இருக்கும் லோக் சபா தேர்தலில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கம் போல குஜராத்தில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கே பாஜக இமாலய வெற்றியைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
இதன்படி மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும், இதர கட்சிகளுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
வாக்கு சதவீதம் எவ்வளவு?: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 க்கு 26 என அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கடந்த முறையும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 62 சதவீத வாக்கு சதவீதத்தை பெறும் என்று கணித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 62 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. ஒரு சதவீதம் கூட குறையாமல் அப்படியே பாஜகவின் ஆதிக்கம் குஜராத்தில் நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த முறை 26 சதவீத வாக்குகளையே பெறும் என்று இந்தியா டுடே கணித்துள்ளது. இதர கட்சிகள் 12 சதவீத வாக்குகளை பெறும் என்று கணித்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் 36 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
குஜராத்தில் மொத்த தொகுதிகள் - 26
தேசிய ஜனநாயக கூட்டணி - 26
இந்தியா கூட்டணி - 0
இதர கட்சிகள் - 0
வாக்கு சதவீதம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 62
இந்தியா கூட்டணி - 26
இதர கட்சிகள் - 12.












Click it and Unblock the Notifications