ஹைதராபாத்தில் திடீர் மீட்டிங்! அடுத்து கேசிஆர் உடன் கைகோர்க்கும் பிரசாந்த் கிஷோர்.. பரபர தகவல்
டெல்லி: மம்தா பானர்ஜி உடன் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள போதிலும், தேசிய அரசியலில் அது குறித்த பேச்சு இப்போதே எழுந்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணிகளில் பல தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

தெலங்கானா முதல்வர்
மத்தியில் பாஜக உடன் தெலங்கானா முதல்வர் கேசிஆர் பெரியளவில் மோதல் எதுவும் இல்லாமலேயே இருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாகவே அவர் தொடர்ச்சியாக பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரையும் அவர் நேரடியாகச் சந்தித்தார். இது 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடியவர் என்ற பட்டியலில் கேசிஆரையும் சேர்த்தது.

பிகே சந்திப்பு
இந்தச் சூழலில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கேசிஆரை சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்திற்கு வெளியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து கேசிஆரை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் கேசிஆர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தெலங்கானா தேர்தல்
தெலங்கானாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் கேசிஆரின் தெலங்கானா ராஷ்டிர சமிதி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கிறது. மேலும், இதற்காக ஏற்கனவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கேசிஆருக்காக பணியாற்றி வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் கையெழுத்தாகவிட்டது என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா எனப் பல மாநிலங்களில் பிரசாந்த் கிஷோரின் பணியாற்றி கட்சிகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்குமார்
கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரியளவில் வெல்ல பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனமும் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் கூட இருவரும் இணைந்தே அரசியலில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜக கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிகே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்
மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், தேசிய அளவில் கால் தடம் பதிக்க விரும்பும் மற்றொரு தலைவராக அறியப்படும் கேசிஆரை சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது பிரசாந்த் கிஷோர் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றா காலேஸ்வரம் திட்டத்தையும் பார்வையிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அவரது இந்தப் பயணம் குறித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications