அதிர்ச்சி.. மூத்த தலைவர் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்து அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் இறுதியாகும் என தெரிகிறது. இந்தச் சூழலில் முக்கிய தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விலகல்: முன்னாள் மத்திய அமைச்சரும் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்து அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸ் தலைமைக்கு நான் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்.. காங்கிரஸ் கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டுக்கால உறவை முடித்துக் கொண்டேன்.. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு தந்த அனைத்து தலைவர்கள், சக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யார் இவர்: காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் தான் இந்த மிலிந்த் தியோரா.. இவர் கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மும்பை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 முதல் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர். இருப்பினும், அதன் பிறகு நடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் அவர் சிவசேனா கட்சியிடம் தோல்வி அடைந்திருந்தார்.
மும்பை தெற்கு தொகுதியில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கு மிலிந்த் தியோரா அதிருப்தி தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரே அணி காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதிலும் தியோரா அதிருப்தி தெரிவித்திருந்தார். மும்பை தெற்கு தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சி வெல்லும் தொகுதி என்றும் அதில் தாக்ரே தரப்பு போட்டியிட்டதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அடுத்து எங்கே: அப்போதே தியோரா குறித்து சில கருத்துகள் பரவ ஆரம்பித்தன. இந்தச் சூழலில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு காங்கிரஸில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவர் அடுத்ததாக ஷிண்டே தரப்பின் சிவசேனாவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மிலிந்த் தியோரா வெளியேறியதைக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். அவரது தந்தை முரளி தியோராவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் நண்பர்கள் இருந்தபோதும், அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்ததை நினைவு கூர்ந்தார்.
சாடல்: ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "முரளி தியோராவுடனான எனது நீண்ட ஆண்டுக்கால நட்பை நினைவுகூர்கிறேன். அவருக்கு எல்லா அரசியல் கட்சிகளிலும் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர், ஆனால் அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்காக நின்றார். அவர் உறுதியான காங்கிரஸ்காரர்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications